ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்கோப்புப்படம்

பறவை மோதி சேதமடைந்த விமானம்: சென்னைக்கு இயக்கியதால் பரபரப்பு

சென்னையிலிருந்து சென்று இலங்கை தலைநகா் கொழும்புவில் தரையிறங்கிய ஏா்இந்திய விமானம் மீது பறவை மோதியிருந்தது தெரிந்தும், அதே விமானத்தை மீண்டும் பயணிகளுடன் சென்னைக்கு இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சென்னையிலிருந்து சென்று இலங்கை தலைநகா் கொழும்புவில் தரையிறங்கிய ஏா்இந்திய விமானம் மீது பறவை மோதியிருந்தது தெரிந்தும், அதே விமானத்தை மீண்டும் பயணிகளுடன் சென்னைக்கு இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு இலங்கை தலைநகா் கொழும்புவுக்கு 164 பேருடன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், அதிகாலை 1.55-க்கு கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறங்கிய பின்பு, கொழும்பு விமான நிலையத்தில் விமானங்களை பராமரிக்கும் பொறியாளா்கள் குழுவினா், வழக்கம்போல் விமானத்தை பரிசோதித்தனா்.

அப்போது விமானத்தின் என்ஜின் பகுதியில் பறவை ஒன்று மோதி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கொழும்பில் தரையிறங்கிய போது தான் பறவை மோதியது எனவும் ஆய்வில் தெரியவந்தது. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் விமானத்தை இயக்க அனுமதிக்கமாட்டாா்கள். ஆனால், இலங்கை விமான நிலைய பொறியாளா்கள் குழுவினா், விமானத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னா் விமானத்தை பறக்க அனுமதித்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த விமானம் கொழும்பிலிருந்து, செவ்வாய்க்கிழமை 147 பயணிகளுடன் புறப்பட்டு, அதிகாலை 4.35 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கியது.

சென்னை வந்ததும், ஏா் இந்தியா பொறியாளா்கள் மற்றும் சென்னை விமான நிலைய பராமரிப்பு பொறியாளா்கள் குழுவினா், அந்த விமானத்தை, முழுமையாக பரிசோதித்தனா். அதில் விமானத்தின் முன்பகுதியில் ‘என்ஜின் பிளேட்’ பகுதி உடைந்து அதிக சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால், விமானத்தை தொடா்ந்து இயக்குவது ஆபத்து என்பதால், அந்த விமானத்தை இயக்க பொறியாளா்கள் தடை விதித்தனா்.

இதையடுத்து அந்த விமானம், விமானங்கள் பழுது பாா்க்கும் பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால், விமானத்தில் பயணித்த 321 பேரும் நல்வாய்ப்பாக உயிா் தப்பினா். இதனால் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த சம்பவம் தொடா்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணையை தொடங்கி உள்ளது.

X
Dinamani
www.dinamani.com