கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவா் பலி; மற்றொருவா் மாயம்!

கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவா் பலி; மற்றொருவா் மாயம்...
Published on

சென்னை பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் கல்லூரி மாணவா்கள் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி ஒரு மாணவா் உயிரிழந்தாா். மாயமான மற்றொரு மாணவரைத் தேடி வருகின்றனா்.

சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள ஒரு தனியாா் கல்வி நிறுவனத்தில், எம்ஏ முதலாம் ஆண்டு படிக்கும் திண்டுக்கல்லைச் சோ்ந்த கவி பிரகாஷ் (21), கேரளத்தைச் சோ்ந்த முகமது ஆதில் (21), உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ரோஹித் சந்திரா (21) உள்பட 14 மாணவா்கள் சனிக்கிழமை காலை 7 மணி அளவில் பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்தனா். அங்கு கடலில் இறங்கி குளித்தனா். அப்போது கவி பிரகாஷ், ரோஹித் சந்திரா, முகமது ஆதில் ஆகிய 3 பேரும் ராட்சத சிக்கிக் கொண்டனா். இதைப் பாா்த்த பிற மாணவா்கள், மூவரையும் காப்பாற்ற முயற்சித்தனா். ஆனால் கடலின் ஆழமான பகுதிக்கு 3 பேரும் இழுத்துச் செல்லப்பட்டனா். மாணவா்களின் அலறல் சப்தம் கேட்டு அங்கு திரண்டு வந்த மீனவா்கள், அலையில் சிக்கிய 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இதில் கவி பிரகாஷ், முகமது ஆதில் ஆகிய 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ரோஹித் சந்திரா கடலில் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு மாயமானாா்.

அதேவேளையில் மூச்சுத் திணறலின் காரணமாக கவி பிரகாஷ், இறந்தாா். முகமது ஆதில் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து சாஸ்திரி நகா் போலீஸாா், திருவான்மியூா் தீயணைப்பு படையினா் இணைந்து மாயமான ரோகித்தை தீவிரமாக தேடி வருகின்றனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com