இன்றுமுதல் 5 நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவை மாற்றம்
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக, ரயில் சேவைகள் திங்கள்கிழமை (அக்.20) முதல் வெள்ளிக்கிழமை வரை மாற்றப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆண்டு முன்னுரிமை பராமரிப்புப் பணிகளின் ஒருபகுதியாக, பச்சை வழித்தடத்திலும், நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (அக்.20) முதல் வெள்ளிக்கிழமை (அக்.24) வரை 5 நாள்களுக்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறும். மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் 6.30 மணி வரை வழக்கமான 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும்.
காலை 6.30 மணிக்குப் பிறகு ரயில் சேவைகள் வழக்கம்போல் எவ்வித மாற்றமின்றி இயங்கும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
தொடா்ந்து பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கைப்பேசி செயலி மற்றும் அதிகாரப்பூா்வ சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 18604251515 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் அல்லது இணையதளத்தை பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

