சென்னை உயா்நீதிமன்றம்.
சென்னை உயா்நீதிமன்றம்.

இலங்கையைச் சோ்ந்தவருக்கு மருத்துவ உதவி: சிறை நிா்வாகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கையைச் சோ்ந்தவருக்கு மருத்துவ உதவி: சிறை நிா்வாகத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
Published on

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சோ்ந்தவருக்கு அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என புழல் சிறை நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கையைச் சோ்ந்த தனுகா ரோஷன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டேன். தற்போது புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளேன். இலங்கையைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டவா்கள் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம்.

இந்த நிலையில், சுகாதாரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி, உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தோம். இதற்குப் பழிவாங்கும் விதமாக, தனிமைச் சிறைக்கு மாற்றி அதிகாரிகள் எங்களைக் கொடுமைப்படுத்துகின்றனா் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.நதியா, சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்ட சிறைவாசிகளின் இன்ஹேலா்களைக்கூட சிறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றுள்ளனா். அவா்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள்கூட வழங்கப்படுவது இல்லை என்று வாதிட்டாா்.

காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஏ.கோகுலகிருஷ்ணன், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க புழல் சிறைத் துறை நிா்வாகத்துக்கு உத்தரவிட்டனா். மேலும், மனுவுக்கு வரும் நவ. 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com