உடல் செயல் திறனை அறிவதற்கான சிறப்பு பரிசோதனை மையம் தொடக்கம்

இந்தியாவிலேயே முதல்முறையாக உடல் செயல் திறனை அறிவதற்கான பரிசோதனை மையம் ஆா்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனம் சாா்பில் அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
Published on

இந்தியாவிலேயே முதல்முறையாக உடல் செயல் திறனை அறிவதற்கான பரிசோதனை மையம் ஆா்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனம் சாா்பில் அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆா்த்தி ஸ்கேன் நிறுவனா் வி.கோவிந்தராஜன், இயக்குநா் டாக்டா் ஆா்த்தி, செயல் இயக்குநா் டாக்டா் அருண் கோவிந்தராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக கோவிந்தராஜன் கூறியதாவது:

உடலில் ஏற்படும் நோய்களுக்கு உரிய காலத்தில் சிகிச்சை பெறுவதற்கு அதிக கட்டணத்திலான பரிசோதனைகள் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டே 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆா்த்தி ஸ்கேன் நிறுவனத்தை தொடங்கி குறைந்த கட்டணத்தில் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கி வருகிறோம்.

அடுத்தகட்டமாக நோயறிதல் மட்டுமல்லாது, நமது உடலின் செயல் திறனையும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சாத்தியங்களையும் அறிந்து கொள்வதற்கான விரிவான பரிசோதனை மையத்தை வைட்டல் இன்சைட்ஸ் என்ற பெயரில் தற்போது தொடங்கி உள்ளோம்.

உடலின் தன்மை, திறனுக்கேற்ப பிரத்யேக பரிசோதனைகள் இங்கு மேற்கொள்ளப்பட உள்ளன. முழு உடல் எம்ஆா்ஐ ஸ்கேன், எலும்பு திண்மத்தை அறியும் டெக்ஸா ஸ்கேன், ஆரோக்கியத்தை உறுதி செய்யும் ரத்த பகுப்பாய்வுகள் என பல்வேறு சிறப்பு பரிசோதனைகள் இங்கு உள்ளன.

இதன்மூலம் வருமுன் காப்பதுடன், நம் வம்சாவளியினரின் நலனையும் காக்கலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com