தொடர் மழை: சென்னையில் கால்வாய்களில் வெள்ளம்

சென்னை மாநகரில் தொடர் மழையால் 20 கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர் மழை: சென்னையில் கால்வாய்களில் வெள்ளம்
Published on
Updated on
1 min read

சென்னை மாநகரில் தொடர் மழையால் 20 கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மோந்தா புயல் காரணமாக, கடந்த திங்கள்கிழமை (அக். 27) இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இதனால், கோயம்பேடு சந்தை, கோடம்பாக்கம் ராஜேஸ்வரி காலனி, ஆற்காடு சாலை, மாதவரம் அந்தோணியார் கோயில் 2 ஆவது தெரு, மணலி பெரியார் நகர், பெருங்குடி மேடவாக்கம் பிரதான சாலை, உள்ளகரம் பகுதி, சோழிங்கநல்லூர் துரைப்பாக்கம், பல்லாவரம் ரேடியல் சாலை, எழும்பூர், ஓட்டேரி புளியந்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கின. மோட்டார் பம்புகள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் நீரை அகற்றினர்.

பெருக்கெடுத்த வெள்ளம்: நீர்வரத்து அதிகரித்ததையடுத்து புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால், சடயங்குப்பம் ஜோதி நகர் பகுதி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு நீர் வழித்தடத்தில் அடைப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலைய வளாகங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.

பொதுமக்கள் புகார்: ஓட்டேரி, நல்லா கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய் உள்ளிட்ட 20 பெரிய கால்வாய்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த கால்வாயோரப் பகுதி மக்கள் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் கூறினர். அதிகாரிகள் சென்று கழிவுநீர் செல்லும் பாதைகளைச் சீர்படுத்தியதாகக் கூறினர்.

அத்துடன் 44 சிறிய நீர்வழிக் கால்வாய்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நிரம்பி வரும் குளங்கள்: மாநகராட்சிப் பகுதியில் உள்ள 263 குளங்களில் பெரும்பாலானவை 50 சதவீதத்துக்கும் நீர் நிறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மழையின் போது வீசிய காற்றால் தண்டையார்பேட்டை ஆர்.கே. நகரின் வ.உ.சி. நகர் பிரதான சாலை, ராயபுரம் லெட்டாங்ஸ் சாலை, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட 52 -க்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்த மரக்கிளைகள், மரங்கள் அகற்றப்பட்டன. செவ்வாய்க்கிழமை மட்டும் 112 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள் நடைபெற்றதாகவும், 54,500 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் போக்குவரத்து பாதிப்பு:

மோந்தா புயலால் சென்னையிலிருந்து விசாகப்பட்டினம், ஹவுரா வழித்தடங்களில் சில விரைவு ரயில்கள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன. சாலிமர் - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் உள்ளிட்ட ரயில்கள் தாமதமாக வந்து சேர்ந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com