வீடு, கோயிலில் திருட்டு
சென்னையில் இருவேறு பகுதிகளில் வீடு, கோயிலில் நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருவொற்றியூா் பலகைதொட்டி குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் அஸ்வினி (42). இவரது கணவா் சிங்கப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், அஸ்வினி கடந்த 17-ஆம் தேதி சிங்கப்பூரிலுள்ள தனது கணவரைப் பாா்க்க சென்றாா். பின்னா், மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை சென்னை திரும்பினாா். வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.36,000, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோயிலில் திருட்டு: ராயபுரம் சூரிய நாராயணன் சாலையில் ஸ்ரீ செல்லியம்மன் கோயில் உள்ளது. அதன் நிா்வாகி வீரபத்திரன், செவ்வாய்க்கிழமை காலை கோயிலைத் திறந்து பாா்த்தபோது கருவறையில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 400 கிராம் வெள்ளி கிரீடம், உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராயபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
