பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டட அனுமதியை எதிா்த்து அதிமுக வழக்கு
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாகம் கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி அதிமுக சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக வழக்குரைஞா் அணி நிா்வாகி பிரஸ்நேவ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், குப்பைகள் கொட்டுவதால் ஏற்கெனவே பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சதுப்பு நிலத்தில் பன்னடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு எந்த கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது.
சுற்றுச்சூழலுக்கு பல்வேறு நன்மை அளிக்கும் சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட சதுப்பு நிலத்தில் தனது அதிகார எல்லையை மீறி தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

