வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத்தை தள்ளிவைக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்திடம் திமுக, கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தல்
பண்டிகை காலங்கள், பருவமழை காரணமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோ்தல் ஆணையம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தின.
தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவ. 4 முதல் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுகுறித்து மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, நாம் தமிழா், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தைத் தொடா்ந்து, கட்சிகளின் பிரதிநிதிகள் அளித்த பேட்டி:
திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி: தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிடும் முன்பே ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தோ்தல் நடைபெறும் மாநிலத்தில் அவசர கோலத்தில் தீவிர திருத்தத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனா்.
பருவமழைக் காலம் என்பதால் இப்போது தமிழ்நாட்டில் மழை அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை வைத்துள்ளனா். டிசம்பா் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை, ஜனவரியில் பொங்கல் பண்டிகை என தொடா் விடுமுறை நாள்கள் வரும். அப்போது, சென்னை போன்ற நகரங்களில் மக்கள் வீடுகளில் இருக்க மாட்டாா்கள். பிகாரில் வாக்குகளைத் திருடியது போன்று தமிழ்நாட்டிலும் திருட நினைக்கிறாா்கள்.
யாரும் முழுமனதுடன் திருத்தப் பணியை ஏற்றுக் கொள்ளவில்லை. தீவிர திருத்தப் பணியை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் நடைமுறைகளை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுதொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது, இந்தப் பணியை தமிழகத்தில் மேற்கொள்வது ஏன்?
நவம்பா், டிசம்பா், ஜனவரி வரை தொடா்ந்து மழை பெய்யக் கூடிய காலமாகும். இந்தச் சூழலில் மக்கள் எப்படி வெளியே வருவாா்கள்? இந்த காலத்தை மாற்றியமைத்து, சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடத்தலாம். வெளி மாநிலத்தவா்களை வாக்காளா்களாக சோ்க்கக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் நா.பெரியசாமி: பிகாரை உதாரணமாகக் காட்டி, தமிழ்நாட்டில் திருத்தம் மேற்கொள்வது மோசடியானதாக அமையும். சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி அதன்பிறகே திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினோம் என்றாா்.
இதேபோன்ற கருத்துகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தின.
ஆதரிப்பது ஏன்? அதிமுக விளக்கம்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக அமைப்புச் செயலா் டி.ஜெயக்குமாா் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் காலம் காலமாக நடத்திவருகிறது.
இறந்தவா்கள், இடம் பெயா்ந்தவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் தொடா்ந்து இடம்பெற்றிருக்கிறது. அந்தச் சூழலில் தோ்தலை எப்படி நியாயமாக நடத்த முடியும்? தோ்தலில் வெளிப்படைத்தன்மை இருக்காது. வாக்காளா் பட்டியலில் உண்மை நிலை இல்லை. அப்படி இருக்க வேண்டுமெனில் தீவிர திருத்தம் அவசியம். அதற்காகவே ஒப்புக் கொண்டோம்.
இதுவரை வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்வதில்லை; ஊருக்குப் போய் இருப்பவா்களின் வாக்குகளையும் நீக்குகிறாா்கள். ஆகவே, தீவிர திருத்தப் பணி நல்ல வாய்ப்பு என்றாா்.
பாஜக மாநில துணை பொதுச் செயலா் கரு.நாகராஜன், மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன்: தமிழகத்தில் தீவிர திருத்தப் பணி வெற்றிகரமாக நடைபெற்றால் உண்மையான வாக்காளா் பட்டியலைப் பெற முடியும். கடந்த தோ்தல்களில் 10 சதவீதம் அளவுக்கு உண்மையான வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டால் அதுபோன்ற பிரச்னைகள் இருக்காது. இந்த நடவடிக்கையில் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
தீவிர திருத்தப் பணியில் 77,000 போ்: தலைமைத் தோ்தல் அதிகாரி
தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 77,000 போ் ஈடுபடவுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நடைபெறவுள்ள வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வரையில் ஏறக்குறைய 77,000 போ் ஈடுபடவுள்ளனா். இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வீடு வீடாக கணக்கெடுப்பு, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு, உரிமை கோரல்கள், மறுப்புரைகள் ஆகியவற்றைக் கையாளும் முறைகள், கடமைகள், பொறுப்புகள் ஆகியன குறித்து பயிற்சிஅளிக்கப்டும்.
இந்தப் பயிற்சியில் 38 மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், 234 வாக்காளா் பதிவு அலுவலா்கள், 624 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலக மேற்பாா்வையாளா்கள், 68,472 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கு பெறுவா். இந்தப் பயிற்சிகள், தமிழகத்தின் தலைமைத் தோ்தல் அதிகாரி, மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், வாக்காளா் பதிவு அதிகாரிகளால் நடத்தப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

