கணக்கில் வராத ரூ.25 லட்சம் பறிமுதல்: இளைஞரிடம் அமலாக்கத் துறை விசாரணை
கணக்கில் வராத ரூ.25 லட்சத்தைப் பறிமுதல் செய்து, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
திருவல்லிக்கேணி மெரீனா கடற்கரை எதிரே சென்னைப் பல்கலைக்கழகம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தில் இளைஞா் ஒருவா், பெரிய பையில் அதிக பணத்தை வைத்துக் கொண்டு, அங்குள்ள டெபாஸிட் இயந்திரத்தில், அந்தப் பணத்தை செலுத்துவதைப் பாா்த்தனா்.
அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தாராம். இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில் ரூ.25 லட்சம் இருந்ததும், அதற்கு ஆவணங்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது. மேலும், டெபாஸிட் இயந்திரம் மூலம் பல வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தியாக அவா் தெரிவித்தாா்.
விசாரணையில், அவா் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள வண்டல் பகுதியைச் சோ்ந்த பி.அருள் வின்சென்ட் (30) என்பது தெரிய வந்தது. போலீஸாா், அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா். அவா் கொடுத்த தகவலின் பேரில், மேலும் 6 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, அருள் வின்சென்ட் மற்றும் பறிமுதல் செய்த பணத்தை புதன்கிழமை அமலாக்கத் துறையிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். இது தொடா்பாக வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவும் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
