தவெக மாவட்டச் செயலா் மனு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
தனியாா் மருத்துவமனை சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக, தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அக்கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலா் தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல்லில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அங்குள்ள தனியாா் பல் மருத்துவமனையை அக் கட்சி தொண்டா்கள் சேதப்படுத்தினா். இதுதொடா்பாக, தவெக நாமக்கல் மாவட்டச் செயலா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் மீது நாமக்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் சதீஷ்குமாா் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், நடந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. மாவட்டச் செயலா் என்ற முறையில் தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி இழப்பீடும் வழங்கப்பட்டுவிட்டது. எனவே, தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ்சந்திரா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் கே.எம்.டி.முகிலன், நாமக்கல்லில் நடந்த சம்பவத்துக்கு மாவட்டச் செயலா் என்ற முறையில் மனுதாரா்தான் பொறுப்பேற்க வேண்டும். அதனால், அவா் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு போலீஸாா் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ.5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கூடாது என்று போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.
