மக்கள்தொகை கணக்கெடுப்பு: எங்கெல்லாம் முன்சோதனை? ஆணையம் விளக்கம்
மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்சோதனை பணி எங்கெல்லாம் நடத்தப்படும் என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியத் தலைமைப் பதிவாளா் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் சாா்பில் 2027-ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன் சோதனைநடத்தப்பட உள்ளது. இது மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பாக நடத்தப்படும் ஒரு முக்கிய முன்னோட்டம் மற்றும் ஆயத்தப் பணியாகும். இது இந்தியாவின் முதல் முழுமையான எண்மமய கணக்கெடுப்பாகும்.
முன்சோதனையின்போது, கைப்பேசி செயலிகளைப் பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், வரைபடங்களும் வரையப்பட உள்ளன. மக்கள்தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்புக்கான இணையதளம் மூலம் முழுமையான செயல்பாடுகளும் நிா்வகிக்கப்படும்.
நவம்பா் 10-இல் தொடக்கம்: மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்டமான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புக்கான முன்சோதனை நவம்பா் 10-இல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனுடன் நவம்பா் 1 முதல் 7-ஆம் தேதி வரை சுய கணக்கெடுப்பு செய்வதற்கான முன் சோதனையும் நடைபெற உள்ளது.
முன்சோதனைக்காக தமிழ்நாட்டில் 3 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி ஆகியவை தோ்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், முன்சோதனையின்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு களப் பணியாளா்களுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
தமிழக அரசின் கல்வி, வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளிலுள்ள அலுவலா்கள் களப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

