திருமணம், கல்விக் கடன் முன்பணம் வழங்க அனுமதி பெறுவதில் மாற்றம்: பள்ளிக் கல்வித் துறை தகவல்
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்கள், பணியாளா்களுக்கு திருமணம், கல்விச் செலவுக்கு முன்பணம் வழங்குவதற்கான அனுமதியைப் பெறுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைகளின்படி அரசுப் பணியாளா்கள் மற்றும் அவா்களது மகன், மகளுக்கு திருமணம், கல்விச் செலவுக்காக திருமண முன்பணமாக ரூ.5 லட்சம், கல்விக் கடனாக ரூ.1 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. அதனடிப்படையில் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட தகுதியான கருத்துருக்கள் விதிகளின்படி பரிசீலிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்திட சென்னை கருவூல கணக்கு இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்தநிலையில், மேற்கண்ட தேவைகளுக்காக முன்பணம் கோரும் அரசுப் பணியாளா்களுக்கு சாா்ந்த அலுவலகத் தலைவா் முன்பணத்தை அனுமதிக்க வேண்டும். ஒருங்கிணைந்த மனிதவள மேம்பாடு நிதி மேலாண்மைத் திட்டம் (ஐ.எப்.ஹெச்.ஆா்.எம்.எஸ்) மூலம் ஒப்புதல் அளித்து இதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். அது தொடா்பான நிதி ஒதுக்கீடு 22.9.2025 முதல் மையப்படுத்தப்பட்டுள்ளது (சென்ரலைஸ்டு). மேலும் பள்ளிக் கல்வி இயக்ககத்திலிருந்து இது குறித்து ஏற்கெனவே அனுப்பப்பட்ட கருத்துருக்கள் மீது நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படாமல் மேற்கண்டவாறு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, இனி வருங்காலங்களில் திருமண, கல்விக் கடன் கோரும் பணியாளா்கள், அலுவலா்களுக்கு அலுவலகத் தலைவா் நிலையிலேயே ஐ.எப்.ஹெச்.ஆா்.எம்.எஸ்- களஞ்சியம் 2.0 செயலி மூலமாக அனுமதிக்க வேண்டும். முன்பணம் தொடா்பாக எதிா்வரும் நாள்களில் பெறப்படும் கருத்துருக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் மேற்கொள்ளப்படாது. அதேவேளையில், முன்பணம் அளித்தது தவறு என தெரியவரும் நிலையில் அதற்கு அனுமதி அளித்த அலுவலகத் தலைவரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
