டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் டெங்கு பாதித்து 9 போ் உயிரிழந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்துவருவதால், அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீா் தேங்கி கொசு உற்பத்தி பெருகியுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் 16,500 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 9 போ் மரணமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை, திருவள்ளூா், கோவை மாவட்டங்களில் மக்கள் டெங்குவால் அதிகம்போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதையடுத்து அந்த மாவட்டங்களில் அரசே சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அரசு சாா்பில் டெங்குவை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டமக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு அதிகம் செல்கிறாா்கள். அதனால் மருத்துவமனைகளில் தேவையான மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை இன்றி வழங்கவேண்டும். மருத்துவமனைகளில் கழிவுநீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும், மக்கள் தெரிவிக்கின்றனா். ஆகவே, மருத்துவமனைகளின் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைக்கவேண்டும். அத்துடன், உள்ளாட்சி தூய்மைப் பணியாளா்கள் மூலம் மழைநீா் தேங்காமல் உடனுக்குடன் அகற்றவேண்டும். மக்களிடம் வீடுகளில் தண்ணீா் தேங்காத வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்தவேண்டும். குடிநீா் தொட்டிகளில் குளோரின் மருந்து தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
மக்கள் பாதிக்கப்பட்டபின் நடவடிக்கை எடுப்பதாக, காரணம் கூறாமல் திமுக அரசு இனியாவது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

