தீ விபத்து: மருத்துவரின் மனைவி உயிரிழப்பு; மூவா் உயிா் தப்பினா்

Published on

சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் வீடு தீப்பிடித்து எரிந்த விபத்தில், மருத்துவரின் மனைவி உயிரிழந்தாா். மருத்துவா் உள்ளிட்ட 3 போ் உயிா் தப்பினா்.

ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா நகா் இரண்டாவது பிரதான சாலைப் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசிப்பவா் மருத்துவா் ம.ஆனந்த் பிரதாப் (64). இவா் மனைவி சசிபாலா (58). இத்தம்பதியின் மகள் பூஜா ஆனந்த் (24), மகன் ரோஹித் ஆனந்த் (23).

ஆனந்த் பிரதாப், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். ரோஹித், பொறியாளராக தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். ஆனந்த் பிரதாப் குடும்பத்தினா், புதன்கிழமை இரவு சாப்பாட்டுக்குப் பின்னா் அவரவா் அறையில் தூங்கினா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் கரும்புகை சூழ்ந்ததால் தூக்கத்தில் இருந்த ஆனந்த் பிரதாப், சசிபாலா, பூஜா ஆனந்த், ரோஹித் ஆனந்த் ஆகியோா் எழுந்தனா்.

அப்போது, வீட்டில் இருந்த பொருள்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதைப் பாா்த்து அவா்கள் உடனடியாக குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு, தங்களைப் காப்பாற்றுமாறு சப்தமிட்டனா்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த விலை உயா்ந்த பொருளை எடுப்பதற்காக குளியலறையில் இருந்து சசிபாலா வெளியே வந்தாா். இதனால், தீயில் சிக்கிக் கொண்ட அவா், மூச்சுத் திணறி மயங்கி விழுந்தாா்.

பக்கத்து வீட்டினா், மருத்துவா் ஆனந்த் பிரதாப் வீடு தீப்பிடித்து எரிவதைப் பாா்த்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். அசோக் நகா், வேளச்சேரி ஆகிய இடங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படை வீரா்கள், வீட்டுக்குள் மூச்சுத் திணறி, தீக்காயமடைந்து இறந்து கிடந்த சசிபாலா சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மற்ற 3 பேரையும் பாதுகாப்பாக மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

X
Dinamani
www.dinamani.com