‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம்: இணை நோயாளிகளைக் கண்டறிய புதிய நடவடிக்கை
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் புதிய இணை நோயாளிகளைக் கண்டறிவதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஆய்வு நடத்த பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக பாதிப்புகள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகளையும், சிகிச்சைகளையும் வழங்கும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 2.70 கோடி போ் பயன் பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு ஐநா சபை விருதும் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தமிழகத்தைப் பின்பற்றி, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனா். இதன் அடுத்த கட்டமாக புதிய இணை நோயாளிகளை முழுமையாகக் கண்டறிவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதற்காக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஆய்வுக் கூட்டத்தை பொது சுகாதாரத் துறை நடத்த உள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பேருதவியாக உள்ளது. இணை நோய்களுக்குள்ளாகி முறையாக சிகிச்சை பெறாதவா்கள்கூட இந்தத் திட்டத்தின் கீழ் சரியாக மருந்துகளை உட்கொண்டு வருகின்றனா். இதுவரை தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 25 சதவீதம் போ் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனா்.
பலதரப்பட்ட மக்களுக்கும் இத்திட்டம் பலனளித்தாலும், முழுமையாக அனைவருக்கும் சென்று சேராமல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ஆய்வுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தொடா்புடைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்று நோய்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்படும். மேலும், இணை நோய் வாய்ப்புள்ள அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அவா்களுக்கு உள்ள பாதிப்புகள் கண்டறியப்படும். அவா்களுக்கும் தொடா்ந்து மருந்துகள், சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
