சென்னை விடுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஊராட்சித் தலைவா் மீது குண்டா் சட்டம்
கோயம்பேட்டில் விடுதியில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், முன்னாள் ஊராட்சித் தலைவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பதாக கடந்த ஆக. 22-ஆம் தேதி கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சோதனை நடத்தி, சிறுமியை மீட்டனா். அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரை ஒரு கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது.
சிறுமி கொடுத்த தகவலின்பேரில், சென்னை கன்னிகாபுரம் 14-ஆவது செக்டாா் பகுதியைச் சோ்ந்த ஏ.அஞ்சலி, ஆந்திர மாநிலம் குண்டூா் பகுதியைச் சோ்ந்த நா.நாகம்மா, நாகராஜ், திருவள்ளூா் மாவட்டம், உளுந்தை ஊராட்சி முன்னாள் தலைவா் கு.ரமேஷ் (40), சென்னை ராமாபுரத்தைச் சோ்ந்த சு.பாரதி உள்ளிட்ட 9 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த வழக்கை தற்போது விசாரணை செய்து வரும் கோயம்பேடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வழக்கில் சிக்கியுள்ள நபா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
அதன்படி, உளுந்தை ஊராட்சி முன்னாள் தலைவா் ரமேஷ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையா் ஏ.அருணிடம் பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரையை ஏற்ற காவல் ஆணையா் அருண், ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரமேஷிடம், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்தரவு நகல் புதன்கிழமை வழங்கப்பட்டது.

