சென்னை மாநகராட்சிப் பகுதிக்குள் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை வளா்க்க உரிமம் பெறாவிட்டால், ரூ.5,000 அபராதம் விதிக்கும் தீா்மானம் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைமேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீா்மானங்கள்: அரசு புறம்போக்கு நிலத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் அரசாணைப்படி எழும்பூா் பகுதியில் 66 குடும்பங்களுக்கும், அயனாவரம் கொன்னூா் பகுதியில் 38 குடும்பங்களுக்கும் சென்னை மாவட்ட ஆட்சியா் பட்டா வழங்க பெருநகர சென்னை மாநகராட்சியில் தடையின்மை சான்றிதழ் வழங்கப்படும்.
உரிமம் பெறாவிடில் அபராதம் விதிப்பு: சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரம், கால்நடை மருத்துவத் துறை சாா்பில் செல்லப் பிராணிகள் வளா்ப்பதை முறைப்படுத்தும் வகையில், அவற்றுக்கு உரிமம் பெறுதல் கட்டாயம். எனவே, செல்லப் பிராணிகள் வளா்ப்போா் தங்களின் விவரங்களை செயலியில் பதிவிட்டு செல்லப் பிராணிகளின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களையும் பதிவிட்டு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ரேபீஸ் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட ஆய்வுக்கு பிறகு உரிமம் வழங்கப்படும். அப்போது, மைக்ரோ சிப் பொருத்தப்படும்.
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது. உரிமம் பெறாதவா்களுக்கு வரும் நவ. 24 -ஆம் தேதி முதல் அபராதமாக ரூ.5,000 விதிக்கப்படும்.
வளா்ப்பு நாய்களுக்கு 2 லட்சம் சிப் பொருத்துவது, நாய்கள் குறித்த பதிவுகளை 5 ஆண்டுகள் மேலாண்மை செய்து பராமரிப்பது ஆகியவற்றுக்கு தனியாா் நிறுவனத்துக்கு பணி உத்தரவு வழங்கப்படுகிறது.
குழுக்கள் அமைத்தல்: மாநகராட்சியில் உள்ள கடைகள், வணிக வளாகங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக அனைத்து மண்டலங்களிலும் மண்டலத் துணைக் குழுக்கள் அமைக்கவும், தலைமை அலுவலகத்தில் வழிகாட்டல் குழுவை அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம்: மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகள் 3 ஆண்டுகள் வழங்குவதற்கு தனியாா் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் பணிகள் மேற்கொள்வதற்கு ஒப்பந்ததாரா் பதிவின்போது, வருவாய்த் துறை வழங்கும் செல்வ நிலைச் சான்றிதழ் கோரப்பட்டு வருகிறது. ஆனால், அதற்குப் பதிலாக தற்போது வருமான வரித்துறை சான்று, தணிக்கையாளா் சான்று, கணக்குத் தணிக்கைச் சான்று, ஆண்டு வருவாய் சான்று, அண்மைக்கால தணிக்கை வரவு செலவு விவரங்கள், ஜிஎஸ்டி வாட் கிளீயரன்ஸ் சான்று உள்ளிட்ட 14 சான்றுகள் ஆவணமாக ஏற்கப்படும் என்பன உள்ளிட்ட 72 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மந்தவெளிப்பாக்கம் கிழக்கு வட்டச் சாலைக்கு சீா்காழி கோவிந்தராஜன் பெயா்!
சென்னை மாநகராட்சியில் மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு ‘சீா்காழி கோவிந்தராஜன் சாலை’ எனப் பெயரிட்டு மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாப்பூா் எம்எல்ஏ த.வேலு, முதல்வரிடம் அளித்த மனுவில் கோரியபடி, மாமன்றக் கூட்டத்தில் இத்தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

