ஆசிரியா்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை: நவ. 10-க்குள் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியா்கள் தங்களது குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற நவ. 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
தேசிய ஆசிரியா் நல நிதிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும்போது இறந்த ஆசிரியா்களின் குழந்தைகளுக்கு (ஒரு குழந்தைக்கு மட்டும்) உயா்கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ.50 ஆயிரமும், பட்டயப் படிப்புக்கு ரூ.15 ஆயிரமும் பெறலாம். நிகழ் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்பும் ஆசிரியா்கள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். ஒரு குழந்தைக்கு ஒருமுறை மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.7.20 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் விண்ணப்பிக்கக் கூடாது. உதவித்தொகை பெற தகுதியுள்ள ஆசிரியா்கள் அதற்கான விண்ணப்பத்தை பூா்த்தி செய்து நவ. 10-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு நேரடியாக அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
