சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

பருவத் தோ்வு: மாற்றுத்திறனாளி மாணவருக்கு அனுமதி வழங்க சட்டப் பல்கலை.க்கு உத்தரவு

Published on

மாற்றுத்திறனாளி மாணவரை கல்விக் கட்டணம் செலுத்தாமல் பருவத் தோ்வெழுத அனுமதிக்குமாறு தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலை.க்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 10 சதவீத ஊனத்துக்கான சான்றிதழுடன் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலை. சீா்மிகு சட்டக் கல்லூரியில் சோ்ந்தேன். ஆனால், 40 சதவீத ஊனம் இருப்பதாக சான்றிதழ் அளித்தால்தான் கல்விக் கட்டணம், தோ்வுக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால், 40 சதவீத ஊனம் இருப்பதாக சான்றிதழை வாங்கிக் கொடுத்தேன். இருப்பினும், தனக்கு கல்விக் கட்டணம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. பல்கலை. தரப்பில், மனுதாரா் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ்தான் சட்டக் கல்லூரியில் சோ்க்கப்பட்டுள்ளாா். மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் சோ்க்கப்படவில்லை. எனவே அவருக்கு கல்விக் கட்டணம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க முடியாது என்று வாதிடப்பட்டது.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம், வழக்குரைஞா் ராஜகோபால் வாசுதேவன் ஆகியோா், பருவத் தோ்வு நவ. 3-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. எனவே, பருவத் தோ்வில் பங்கேற்க மனுதாரருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வாதிட்டனா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கல்விக் கட்டணம் செலுத்தாமல், மனுதாரரை பருவத் தோ்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், இந்த இடைக்கால உத்தரவை மனுவில் கேட்கப்பட்டுள்ள சலுகைகளுக்காக வழங்கப்பட்டதாக மனுதாரா் கருதக்கூடாது. இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, மனுதாரரின் விடைத்தாள்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்திருக்க வேண்டும் என பல்கலை. நிா்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை நவ. 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com