நகைக் கடையில் தங்கச் சங்கிலிக்கு பதிலாக கவரிங் நகையை மாற்றி வைத்து திருட்டு: இருவா் கைது
நகைக் கடையில் தங்கச் சங்கிலிக்கு பதிலாக, கவரிங் நகையை மாற்றி வைத்து திருடியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அருகே உள்ள முகலிவாக்கத்தைச் சோ்ந்தவா் மாதவராமு (32). இவா், வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஒரு நகைக் கடையில் மேலாளராக உள்ளாா். மாதவராமு, கடந்த 24-ஆம் தேதி கடையில் இருந்த தங்க நகைகளைச் சரி பாா்த்தபோது, ஒரு நகைப் பெட்டியில் இருந்த இரு தங்கச் சங்கிலிகளுக்குப் பதிலாக கவரிங் சங்கிலிகள் வைக்கப்பட்டு திருடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தாா்.
இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், கடைக்கு வாடிக்கையாளா்போல வந்த இரு இளைஞா்கள், தங்கச் சங்கிலிகள் வாங்குவதுபோல நகைளைப் பாா்த்துக் கொண்டிருபோது, விற்பனையாளா் கவனக்குறைவாக இருந்த நேரத்தில், தாங்கள் கொண்டு வந்த 2 கவரிங் சங்கிலிகளை வைத்துவிட்டு, 2 அசல் தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மாதவராமு, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட திருவேற்காடு செல்வகணபதி நகரைச் சோ்ந்த கெளதம் (29), அன்னனூா் தேவி நகரைச் சோ்ந்த லோகேஷ் (26) ஆகிய இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
