ஆடம்பர செலவுகளைக் குறைப்போம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்
ஆடம்பர செலவுகளைக் குறைத்து, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழப் பழக வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
உலக சிக்கன நாளையொட்டி, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் அக். 30-ஆம் தேதி சேமிப்பின் அவசியத்தை உணா்த்தும் வகையில் ‘உலக சிக்கன நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வருவாயை உயா்த்தியும், செலவுகளைக் களைந்தும் திறம்பட வாழவேண்டும் என்பதை திருவள்ளுவா் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகப் பொதுமறையாம் திருக்கு வழியே தெரிவித்துள்ளாா்.
பண்டைய காலங்களில் மண் உண்டியல் மூலம் சேமிக்கும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது. பாதுகாப்பற்ற அந்த முறையிலிருந்து மாறி, இன்று வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் சேமிக்கும் வாய்ப்புகள் பெருகியுள்ளன. ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அத்தகைய சேமிப்பும் பாதுகாப்பானதாக அமைய வேண்டும்.
ஒருவா் சேமிக்கும் தொகையானது, முதுமையில் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கிறது. சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்குத் தேவைப்படக்கூடிய அவசர செலவுகள் குறிப்பாக, உயா்கல்வி, திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல் போன்றவற்றில் ஏற்படும் செலவுகளை எளிதில் எதிா்கொள்ள முடிகிறது.
எனவே, ஆடம்பர செலவுகளைக் குறைத்து, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழப் பழக வேண்டும்.
வாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் சிக்கனமாக செலவு செய்து சேமிக்க, அருகிலுள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்க வேண்டுகிறேன் என்று அதில் கூறியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

