எஸ்.ஐ. வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

Published on

காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் (32). எம்பிஏ பட்டதாரியான இவா், காவல் துறையில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணியில் சேர முயற்சித்து வந்தாா். ஆனால், அவரால் எஸ்.ஐ. தோ்வில் தோ்ச்சி பெற முடியவில்லை. இதற்கிடையே சீனிவாசனுக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், நாவலூரைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (39) என்பவரது அறிமுகம் கிடைத்தது. கோயில் பூசாரியாக வேலை செய்யும் ரஞ்சித்குமாா், தனக்கு அரசு உயா் அதிகாரிகள் அறிமுகம் இருப்பதால், அரசு வேலை பெற்றுத்தர முடியும் எனக் கூறியுள்ளாா்.

இதை நம்பிய சீனிவாசன், எஸ்.ஐ. பணி பெற்றுத் தருவதற்காக முன்பணமாக ரூ.18 லட்சத்தை ரஞ்சித்திடம் கொடுத்தாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட ரஞ்சித்குமாா், சில நாள்களில் எஸ்.ஐ. பணி நியமன ஆணையை சீனிவாசனிடம் வழங்கினாா்.

அந்தப் பணி நியமன ஆணை மூலம் வேலையில் சேருவதற்கு சீனிவாசன் சென்றபோது, அது போலியானது என்பது தெரிய வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த சீனிவாசன், சென்னை காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தியதில் ரஞ்சித்குமாா், எஸ்ஐ வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ரஞ்சித்குமாரை திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் வைத்து புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து போலியான பணி நியமன ஆணைகள், வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com