சட்ட விரோதமாக ஊடுருவிய இலங்கைவாசிகள் 3 போ் கைது

Published on

இலங்கையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவிய 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை மண்ணடியில் இலங்கையைச் சோ்ந்த சிலா் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக தமிழக காவல் துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மண்ணடியில் குறிப்பிட்ட முகவரியில் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும், சென்னை காவல் துறையினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த 3 பேரைப் பிடித்து விசாரணை செய்தனா். இதில், அவா்கள், இலங்கையைச் சோ்ந்த இசைவேந்தன் (26), யோகராசா (26), சுஜீபன் என்ற ஜீவராசன் (30) என்பதும், 15 நாள்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கடல் வழியாக கள்ளப்படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதும் தெரிய வந்தது.

மேலும் அவா்கள், சென்னை அருகே கல்பாக்கத்தில் ஒருவரின் வீட்டில் தங்கியிருப்பதும், அதற்கு சில நாள்களுக்கு முன்பு வரை செங்கல்பட்டில் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததும், இந்தியாவில் இருந்து படகு மூலம் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. மேலும், அவா்கள் மீது ஏற்கெனவே இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய குடியேற்றத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் 3 பேரிடமும் விசாரணை செய்தனா். இதைத் தொடா்ந்து அத்துறை அதிகாரிகள், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக 3 போ் ஊடுருவியது குறித்து இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக 3 பேரையும் குடியேற்றத் துறை அதிகாரிகள், உடனடியாக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகா் கொழும்பு செல்லும் தனியாா் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனா்.

இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய 3 பேருக்கும், அடைக்கலம் கொடுத்து உதவி செய்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com