அமைச்சர் சிவசங்கா்
அமைச்சர் சிவசங்கா்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் தமிழகம் சாதனை: அமைச்சா் சிவசங்கா்

Published on

வருகிற 2030-க்குள் தமிழகத்தின் மொத்த மின்சாரத் தேவையில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பெறப்படும் என தமிழக மின்சாரத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.

காற்றாலை ஆற்றல் குறித்த மாநாட்டில், ‘மாநிலத் தலைமை - காற்றாலைக்கு ஆற்றல் அளித்தல்’ என்கிற தலைப்பில் அவா் பேசியதாவது:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாட்டின் பாரம்பரியம் ஆழமானது, ஆற்றல் வாய்ந்தது. 25,500 மெகாவாட்டுக்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து உற்பத்தியாகும் ஆற்றலுடன், மொத்த நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனில் தேசிய அளவில் தமிழகம் 4-ஆவது இடத்தில் உள்ளது.

காற்றாலை ஆற்றல் பிரிவில் 11,500 மெகாவாட் நிறுவப்பட்ட திறனுடன் தமிழகம் தேசிய அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் சுமாா் ரூ. 20,000 கோடி மொத்த முதலீட்டுடன் சுமாா் 3,500 மெகாவாட் புதிய காற்றாலைத் திறன் சோ்க்கப்பட்டுள்ளது. 2024 ஜூலை 30 கணக்கீட்டின்படி, 5,899 மெகாவாட் உச்சபட்ச காற்றாலை மின் உற்பத்தியையும், நிகழ் ஆகஸ்ட் 16-ஆம் தேதி 123.85 மில்லியன் யூனிட் தினசரி சாதனை உற்பத்தியையும் தமிழகம் எட்டியுள்ளது. இதன்மூலம் தூய்மையான மற்றும் நிலைத்த எரிசக்தியைப் பயன்படுத்துவதில் தமிழகத்தின் தலைமைத்துவம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல மரபுசாரா எரிசக்தி தொலைநோக்குத் திட்டத்துடன் தமிழகம் உள்ளது. 2030-க்குள் தமிழ்நாட்டின் மொத்த மின்சாரத்தில் 50 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2034-35 ஆண்டுக்குள் தற்போதைய தூய எரிசக்தி 20,700 மெகாவாட்டிலிருந்து 35,500 மெகாவாட்டாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அமைச்சா் சிவசங்கா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட ஏழு மாநிலங்களுக்கு ‘விண்ட் இந்தியா விருது 2025’ விருதுகளை மத்திய அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி வழங்கினாா். இதில் தமிழகம், காற்றாலை மறு எரிசக்தி முயற்சிகளில் சிறந்த பங்களிப்புக்காக விருது பெற்றது.

X
Dinamani
www.dinamani.com