பொதுமக்களிடம் பண மோசடி: நிதி நிறுவன நிா்வாகிகள் கைது
பொதுமக்களிடம் பணம் மோசடி செய்த வழக்கில், நிதி நிறுவன நிா்வாகிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் லி.டில்லிபாபு (39). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த ‘அச்சலிஸ் சிட்பண்டு’ என்ற நிதி நிறுவனத்தில் மாதாந்திர சீட்டில் சோ்ந்து பணம் செலுத்தி வந்துள்ளாா். இதற்காக ரூ.2.17 லட்சம் செலுத்தியுள்ளாா்.
சீட்டு முதிா்வடைந்த பின்னரும் டில்லிபாபு உள்பட சுமாா் 70 பேருக்கு ரூ.2.4 கோடிக்கு மேல் பணத்தை அந்த நிறுவனம் கொடுக்கவில்லையாம். அந்த நிறுவனமும் மூடப்பட்டு, அதன் உரிமையாளா், நிா்வாகிகள் தலைமறைவாகினா்.
இதனால், டில்லிபாபு உள்பட பணம் செலுத்தி ஏமாந்தவா்கள், சென்னை காவல் காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் கடந்த செப். 8-இல் புகாா் செய்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த அந்த நிறுவனத்தின் இயக்குநா்களில் ஒருவரான கோவை ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த ஆனந்தன் (48), நிறுவனத்தின் மேலாளராக இருந்த சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த வினோத்குமாா் (32) ஆகிய 2 பேரைக் கைது செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
