காா் நிறுத்துவதில் மோதல்: 6 போ் கைது
சென்னை பூக்கடையில் காா் நிறுத்துவதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பூக்கடை ஆண்டா்சன் தெருவில் அழைப்பிதழ்கள் தயாரித்து விற்பனை செய்யும் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. குறுகிய பகுதி என்பதால் இங்கு வாகனம் நிறுத்துவதில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை அங்கு அழைப்பிதழ் வாங்க வந்த ஒருவா், தனது காரை அந்த தெருவில், அழைப்பிதழ் வாங்க வந்த கடையின் அருகே நிறுத்த முயன்றாா். அப்போது, அந்த காா் பின்நோக்கி இயக்கியபோது, அருகே உள்ள மற்றொரு கடையின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இதனால், இரு கடை ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே இரு கடைகளைச் சோ்ந்த ஊழியா்கள் ஒருவா் மீது ஒருவா் சரமாரியாக தாக்கிக் கொண்டனா். இதில், காயமடைந்தவா்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து பூக்கடை போலீஸாா் இரு தரப்பினா் மீதும் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து 6 பேரைக் கைது செய்தனா்.
