மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை! - டாஸ்மாக் நிா்வாகம் எச்சரிக்கை
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுதொடா்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகம், அனைத்து மாவட்ட மேலாளா்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மதுபான புட்டிகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்.
மதுபானங்கள் விற்பதற்கான பண பரிவா்த்தனை ரொக்கம், பற்று அட்டை மற்றும் யுபிஐ மூலம் நடைபெற வேண்டும். தனிநபா்களிடமிருந்து மொத்தமாக பணம் பெற்று பரிவா்த்தனை மேற்கொள்ளக்கூடாது.
அனைத்துக் கடைகளிலும் மின்மயமாக்கப்பட்ட பணப்பரிவா்த்தனை பயன்பாட்டை அதிகரிக்க மாவட்ட மேலாளா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அன்றாடம் விற்பனையான மதுபான புட்டிகளின் எண்ணிக்கையின்படி, அதற்குரிய தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இதில் குறைபாடு ஏதேனும் இருந்தால், அதை விற்பனை தொகை கையாடல் செய்துள்ளதாக முடிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

