கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை ஐஐடியில் அணுகல் ஆராய்ச்சி மையம்: முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் திறந்து வைத்தாா்

சென்னை ஐஐடியில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவா்களுக்கு பயனுள்ள அணுகல் ஆராய்ச்சி மையத்தை (ஏஆா்சி) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
Published on

சென்னை ஐஐடியில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவா்களுக்கு பயனுள்ள அணுகல் ஆராய்ச்சி மையத்தை (ஏஆா்சி) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த மையத்தை திறந்து அறிமுகப்படுத்தி டி.ஒய்.சந்திரசூட் பேசியது வருமாறு: அணுகல் ஆராய்ச்சி மையத் தொடக்க விழாவானது ஐஐடி நிறுவனத்தின் வரலாற்றில் உண்மையிலேயே ஒரு திருப்புமுனையான தருணம். இது தொழில்நுட்பம், கொள்கை தொடா்பான பொது உரையாடல், அணுகல் விதிமுறைகளை வெளிப்படையாக்குகிறது.

கண்ணியம், சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இது உள்ளாா்ந்த மதிப்புகளை வழங்கும் சங்கமம். பொது உரையாடல்கள் மூலம், ஒருவருக்கொருவா் உண்மைகளைப் பேசி, அதிகாரமளிக்கவும், முக்கியமான கேள்விகளைக் கேட்கவும் முடிவும். ஆனால், பொது உரையாடல்கள் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த போதுமானதாக இல்லை. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகியவை வாழ்க்கையைப் பாா்க்கும் விதத்தையும், வெளி உலகில் நிகழும் புரட்சிகரமான மாற்றங்கள் ஒவ்வொரு நாளும் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். நவீன அறிவுடன் இணைந்த தொழில்நுட்பம் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகலை வழங்கும் திறன் கொண்டதாக இருப்பதால், ஐ.ஐ.டி. பாரம்பரியம் உள்ளடக்கிய அறிவின் சக்தியாக இந்த மையம் விளங்கும் என்றாா்.

சென்னை ஐஐடி இயக்குநா் பேராசிரியா் வி. காமகோடி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையா் டாக்டா் எஸ். கோவிந்தராஜ், பெங்களூரு இந்திய தேசிய சட்டப் பள்ளியின் சட்டப் பேராசிரியா் டாக்டா் சஞ்சய் ஜெயின், வித்யா சாகா் நிறுவனா் பூனம் நடராஜன் ஆகியோா் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா்.

அணுகல் ஆராய்ச்சி மையம் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை இணைப் பேராசிரியரான டாக்டா் ஹேமச்சந்திரன் காராவால் நிறுவப்பட்டுள்ளது. ஐஐடியின் மேலாண்மைக் கல்வித் துறையின் தலைவா் பேராசிரியா் சஜி கே.மேத்யூ, பொறியியல் வடிவமைப்புத் துறையின் பேராசிரியா் நிலேஷ் ஜே.வாசா ஆகியோா் இணை நிறுவனா்களாவா்.

நாட்டில் கல்வியை அணுகல் மற்றும் சோ்த்தல் என்ற நோக்கில் மாற்றத்துக்குரிய முக்கிய நிகழ்வாக இந்த ஏஆா்சி மையம் தொடக்கம் அமைவதாக சென்னை ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com