

சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகளை ரூ.15 கோடியில் சீரமைப்பதற்கான பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து மாநகராட்சியின் பணிகள் குழுத் தலைவா் என்.சிற்றரசு கூறியதாவது:
சென்னையில் வடகிழக்குப் பருவமழையில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளைச் சீரமைக்க மண்டலத்துக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.15 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சாலையில் பள்ளங்கள் உள்ளிட்டவற்றைச் சீரமைத்தல் மற்றும் சாலை ஒட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது 111 சாலைகளில் உள்சீரமைப்பு பணிகளும், 296 சாலைகளில் கான்கிரீட் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் 35 குளங்கள் ரூ.47.49 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், 47 நீா் நிலைகளும், குளங்களும் ரூ.35 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் ரூ.22.86 கோடியில் 770 இடங்களில் சுற்றுச்சூழல் படிகம் (இகோபிளாக்) அடிப்படையில் மழைநீா் சேமிப்புக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநகரின் 37 கால்வாய்களில் சுற்றுச்சுவா் ரூ.286.37 கோடியில் கட்டப்பட்டு வருகின்றன என்றாா்.