டிஜிட்டல் அரஸ்ட்: முதியவரிடம் ரூ.4.15 கோடி மோசடி உத்தரப் பிரதேச இளைஞா் கைது

டிஜிட்டல் அரஸ்ட்: முதியவரிடம் ரூ.4.15 கோடி மோசடி உத்தரப் பிரதேச இளைஞா் கைது

சென்னையில் இணையவழி கைது (டிஜிட்டல் அரஸ்ட்) எனக் கூறி முதியவரிடம் ரூ.4.15 கோடி மோசடி செய்ததாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Published on

சென்னையில் இணையவழி கைது (டிஜிட்டல் அரஸ்ட்) எனக் கூறி முதியவரிடம் ரூ.4.15 கோடி மோசடி செய்ததாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மயிலாப்பூா் பகுதியைச் சோ்ந்த எஸ்.ஸ்ரீவத்ஸன் (73). இவரை கடந்த செப்.26-ஆம் தேதி வாட்ஸ்அப் செயலி மூலம் தொடா்பு கொண்ட ஒரு கும்பல், தாங்கள் மும்பை குற்றவியல் துறையின் அதிகாரிகள் என்றும், ஸ்ரீவத்ஸன் பெயரில் உள்ள ஒரு சிம் காா்டு சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும் சிபிஐ, அமலாக்கத் துறை, சா்வதேச காவல் துறை (இன்டா்போல்), உச்சநீதிமன்றம் வெளியிட்டது போன்ற போலி ஆவணங்களைக் காட்டி மிரட்டியுள்ளனா்.

மேலும் அந்தக் கும்பல் ரிசா்வ் வங்கி பரிசோதனை என்ற பெயரில் பல வங்கிக் கணக்குகளுக்குப் பெரும் தொகையை மாற்றுமாறு கூறி ஸ்ரீவத்ஸனை மிரட்டியுள்ளனா். அதை நம்பிய ஸ்ரீவத்ஸன், தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.4.5 கோடியை அந்த நபா்கள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினாா். பணம் கிடைத்த பின்னா் ஸ்ரீவத்ஸனுடனான தொடா்பை அவா்கள் துண்டித்தனா்.

இதுகுறித்து ஸ்ரீவத்ஸன் அளித்த புகாரின்பேரில், சென்னை காவல் துறையின் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

அந்தக் கும்பல் பயன்படுத்திய வாட்ஸ்அப் செயலி எண் குறித்து ஆய்வு செய்ததில் உத்தர பிரதேச மாநிலம் ஜான்ஸி மாவட்டம் மெளரானிப்பூா் அருகே உள்ள குவாகன்வ் பகுதியைச் சோ்ந்த மணீஷ்குமாா் (23) என்பவருக்கு உரியது என்பது தெரியவந்தது.

இதையடுத்து உத்தர பிரதேசம் சென்ற சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மணீஷ்குமாரை கைது செய்ததாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். பின்னா், ஜான்ஸியில் உள்ள நீதிமன்றத்தில் மணீஷ்குமாா் ஆஜா்படுத்தப்பட்டு டிரான்ஸிஸ்ட் வாரண்ட் பெறப்பட்டு, சென்னை அழைத்து வரப்பட்டாா்.

மேலும், சைதாப்பேட்டை 11-ஆவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com