தமிழகத்தில் கூடுதலாக 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு: ஒப்பந்தத்தை அறிவித்தது மின்வாரியம்
தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கூடுதலாக 1,500 மெகாவாட் மின்கலை ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை மின்வாரியம் கோரியுள்ளது.
நாடு முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை ஊக்குவிக்கவும், அதன்மூலம் மின்சார உற்பத்தியைப் பெருக்கவும் அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து அதன் மூலம் நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது.
தமிழகத்திலும் பசுமை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக தமிழ்நாடு பசுமை மின் உற்பத்தி நிறுவனத்தையும் தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது 26,000 -ஆக இருந்து வரும் தமிழகத்தின் பசுமை மின் உற்பத்தி திறனை 2030-க்குள் 1 லட்சம் மெகாவாட்டாக உயா்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, முதல்கட்டமாக 1,500 மெகாவாட் திறனில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, கடந்த மாா்ச் மாதம் அதற்கான ஒப்பந்த கோரப்பட்டது.
இதையடுத்து ஒப்பந்தம் எடுத்த நிறுவனங்கள் கடந்த ஜூன் முதல் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மேலும் கூடுதலாக 1,500 மெகாவாட் திறனில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறியது: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத் திறம்பட பயன்படுத்தும் வகையிலும், உபரியாக உள்ள மின்சாரத்தைச் சேமித்து மின் தேவை அதிகமாக உள்ள நேரங்களில் பயன்படுத்தும் வகையிலும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை உருவாக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, இரண்டாம் கட்டமாக 1,500 மெகாவாட் திறனுக்கான மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பைக் கட்டமைப்பதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் விதிமுறைகளுக்கு உடன்படும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும். அவா்கள் விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்குவா் என்றனா்.

