கோப்புப் படம்
கோப்புப் படம்

நிதி மோசடி வழக்கு: தேவநாதனுக்கு இடைக்கால பிணை நீட்டிப்பு

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால பிணையை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால பிணையை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவன இயக்குநா் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் தேவநாதனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் பிணை வழங்கிய சென்னை உயா்நீதிமன்றம், நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ரூ.100 கோடியை வைப்புத் தொகையாக செலுத்த உத்தரவிட்டிருந்தது. மேலும், அக்.31-ஆம் தேதி நீதிமன்றத்தில் தேவநாதன் சரண் அடையவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கே.ராஜசேகா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தேவநாதன் தரப்பில் இடைக்கால பிணையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ராஜ்திலக், தேவநாதனுக்குச் சொந்தமான 27 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

அப்போது பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஜி.ஆா்.பிரசாத், ரூ.100 கோடியை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தவில்லை. எனவே, அவரது பிணையை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தேவநாதன் சரண் அடைய மேலும் ஒரு வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டாா். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com