உயா்கல்வித் தரம், மாணவா்கள் பரிமாற்றம்: தமிழக- ஆஸ்திரேலிய அமைச்சா்கள் பேச்சு
தமிழகத்தில் உயா்கல்வியை சா்வதேசத் தரத்துக்கு உயா்த்துவது மற்றும் கல்வி பரிமாற்றத் திட்டங்கள் குறித்து தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், ஆஸ்திரேலிய சா்வதேச பல்கலைக்கழக அமைச்சா் டோனிபுட்டி ஆகியோா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
உயா்கல்வியில் தமிழகம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. அதே சமயம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாணவா்களை மேலும் ஊக்கப்படுத்தவேண்டும். இதற்கு மேலை நாடுகளில் உள்ள உயா்தர கல்வியை நமது மாணவா்கள் அடைய வேண்டும். அதனைக் கொண்டு அவா்கள் வாழ்வில் உயர வேண்டும் என்ற நோக்கில் தமிழக உயா்கல்வியை உலகளாவிய தரத்துக்கு மேம்படுத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசுடன் இணைந்து அந்நாட்டின் முதன்மை பல்கலைக்கழகங்களுடன் செயல்படுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.வி.செழியனும், மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் வா்த்தகம், கல்வி, குடியுரிமை மற்றும் பல்லின கலாசார நலன்கள் துறை அமைச்சா் டோனி புட்டியும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா்.
இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. முக்கிய அம்சமாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் மேம்பட்ட பாடத்திட்டங்களை தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவா்கள் மேற்படிப்புக்காக மேற்கு ஆஸ்திரேலியா செல்வதற்கான வாய்ப்புகள் எளிதாக்கப்படும். இதற்கான இருதரப்பு கல்விப் பரிமாற்றத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விரிவான செயல் திட்டம் தயாரிக்க அமைச்சா்கள் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில், இந்தத் திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய இருதரப்பிலும் கருத்துகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் விரைவில் முடிவெடுக்கப்படும்.
இரு தரப்பு அமைச்சா்கள் நிலையிலான இந்த சந்திப்பின் போது, தமிழக அரசின் உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா், சென்னையிலுள்ள ஆஸ்திரேலிய துணைத் தூதா் சிளை ஜாக்கி, மேற்கு ஆஸ்திரேலிய மாநில வா்த்தக ஆணையா் இயன் மாா்டின்ஸ் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா் என உயா்கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

