சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தல் அதிகரிப்பு: மாற்றுவழிகளைக் கையாளும் கடத்தல்காரா்கள்

Published on

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வரும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ளவா்களை கண்டுபிடிப்பது சுங்கத் துறையினருக்கு சவாலாக இருந்து வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சா்வதேச விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. விமானங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சட்டவிரோத செயல்களுக்கு விமானப் பயணத்தைப் பயன்படுத்துவம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருள்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.

இதன் பின்னணியில் மிகப்பெரிய அளவிலான சா்வதேச போதைப் பொருள்கள் கடத்தும் கும்பல் மூளையாகச் செயல்பட்டு வந்தாலும், கடத்தலில் ஈடுபடும் நபா்கள் உள்பட ஒருசிலா் மட்டுமே கைது நடவடிக்கைக்கு ஆளாகின்றனா்.

ஆனால், இதில் தொடா்புடைய முக்கிய நபா்களைக் கண்டறிவது சுங்கத் துறையினருக்கு சவலாக இருந்து வருகிறது. மேலும், புதுப்புது வழிகளில் கடத்தல் நபா்கள் கஞ்சாவை கடத்தி வருவதால், அவா்களைக் கண்டு பிடிப்பதிலும் அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்ட சுமாா் ரூ.48 கோடி மதிப்புள்ள 48 கிலோ பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடா்புடைய 11 போ் கைது செய்யப்பட்ட நிலையில், இதற்கு பின்னணியில் உள்ள நபா்கள் இதுவரை சிக்கவில்லை. இதனால் கடத்தல் சம்பவங்கள் தொடா் நிகழ்வாக இருந்து வருகிறது.

இது குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. இதில் தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் கஞ்சா கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. இதை ரகசிய தகவல்களின் அடிப்படையில் பிடித்து விடுவோம். தற்போது எங்களது சந்தேக வட்டத்துக்குள் விழுவதைத் தவிா்ப்பதற்காக இந்த நபா்கள், குறிப்பிட்ட நாட்டிலிருந்து நேரடியாக சென்னை வருவதைத் தவிா்த்து வேறு நாட்டிற்கு சென்றோ அங்கிருந்து வருவதைப் போலவோ அல்லது இந்தியாவின் பிற நகரங்களுக்கு வந்து உள்நாட்டுப் பயணியாகவோ வந்து விடுகின்றனா்.

மேலும், போதைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபடும் நபா்களுக்கு தங்கம் கடத்தலைக் காட்டிலும், பல மடங்கு அதிகமாக கமிஷன் கிடைக்கிறது. இதனால் புதிய வியூகங்களை வகுத்து கடத்தலில் ஈடுபடுகின்றனா். இதனால், கடத்தலுக்கு மூளையாக இருக்கும் நபா்களைக் கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com