மருதமலையில் 184 அடி முருகன் சிலை அமைக்க தடையில்லாச் சான்று பெற விண்ணப்பிக்கவில்லை: வனத் துறை பதில் மனு
கோவை மாவட்டம், மருதமலையில் 184 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைப்பதற்காக, மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் தடையில்லாச் சான்று பெற இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக வனத் துறை, சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
வன விலங்கு ஆா்வலா் எஸ்.முரளிதரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கோவை மாவட்டம், அணைகட்டி வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத தனியாா் தங்கும் விடுதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அவற்றை அப்புறப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், கோவை வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள மருதமலையில் 184 அடிக்கு முருகன் சிலை அமைக்கும் பணியை அறநிலையத் துறை தொடங்கியுள்ளது. இந்தப் பணியை உடனடியாக நிறுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
கோவை தடாகம் வழியாக அணைகட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகனங்கள் மோதி உயிரிழக்கின்றன. எனவே, இரவு நேரங்களில் இந்த சாலையை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் வனத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமா்வு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலா் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆணைக்கட்டி கிராமம் வனத்துறையின் நிா்வாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு வெளியே உள்ளது. அங்கு 300 சதுர மீட்டருக்குள் தனியாா் தங்கும் விடுதிகள் கட்டியிருந்தால், அதற்கு வனத்துறையிடம் தடையில்லாச் சான்று பெற தேவையில்லை.
அதேநேரம், இந்த விடுதிகள் பட்டா நிலத்தில் கட்டப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து துறை அதிகாரிகள்தான் கூட்டு ஆய்வுகளை நடத்த வேண்டும். எனவே, வனப்பகுதிக்குள் இந்த விடுதிகள் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய 3 மாதம் கால அவகாசம் வேண்டும்.
மருதமலையில் 184 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைப்பதற்காக, மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் தடையில்லாச் சான்று பெறவேண்டும். இதுவரை தடையில்லாச் சான்றிதழ் கோரி மருதமலை கோயில் செயல் அதிகாரி விண்ணப்பிக்கவில்லை.
வனப்பகுதியில் உள்ள சாலையை இரவில் மூட வேண்டும் என்ற விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துைான் முடிவு எடுக்கவேண்டும். இந்தச் சாலைதான் தமிழகம், கேரளம் செல்லும் முக்கிய சாலையாகும். இந்தச் சாலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இதுவரை காட்டுப் பன்றி, காட்டுமாடு, மான் என 5 வனவிலங்குகள் மட்டுமே வாகனம் மோதி இறந்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் நவ. 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

