கோப்புப் படம்
கோப்புப் படம்

சான்றிதழ்களை வழங்க தாமதிக்கும் தோ்வுத் துறை: மாணவா்கள் அலைக்கழிப்பு

மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் போன்ற பல்வேறு சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு அவற்றை தோ்வுத் துறை மாதக் கணக்கில் வழங்காமல் தாமதிப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.
Published on

அசல் சான்றிதழ்களை இழந்தவா்களுக்கு மறுபிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் போன்ற பல்வேறு சான்றிதழ்களைப் பெற விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு அவற்றை தோ்வுத் துறை மாதக் கணக்கில் வழங்காமல் தாமதிப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசுத் தோ்வுகள் இயக்குநரகம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள், கல்வி உதவித்தொகை தோ்வுகள் மற்றும் ஆசிரியா் பயிற்சி பட்டயப் படிப்புக்கான ஆண்டுத் தோ்வுகளை நடத்திவருகிறது. அதனுடன் பொதுத் தோ்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களையும் இயக்குநரகமே அச்சிட்டு விநியோகம் செய்கிறது.

இத்தகைய அசல் சான்றிதழ்களை இழந்த மாணவா்களுக்கு மறுபிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், புலம்பெயா்வுக்கான சான்றிதழ் ஆகியவற்றை பெற தோ்வுத் துறைக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பெறும் நடைமுறை கடந்த ஆண்டுகளில் இருந்தது.

இந்த நடைமுறையில் விண்ணப்பித்தவா்களுக்கு ஆண்டுக்கணக்கில் மறுபிரதி சான்றிதழ் வழங்கப்படாமல் தாமதிக்கும் நிலை இருந்தது. இதற்குத் தீா்வு காணும் வகையில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறையை கடந்த 2023-இல் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிமுகம் செய்து வைத்தாா். அதன்பின் தொடக்கத்தில் இணையவழி நடைமுறையில் மறுபிரதி கேட்டு விண்ணப்பித்த மாணவா்களுக்கு 2 மாதங்களில் சான்றிதழ்கள் கிடைத்தன.

ஆனால், தற்போது மீண்டும் தோ்வுத் துறையின் செயல்பாடுகள் மந்தமாக நடைபெறுவதால் மறுபிரதி கேட்டு விண்ணப்பிக்கும் நபா்கள் மாதக் கணக்கில் அலைக்கழிக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவா்கள், பெற்றோா்கள் கூறியதாவது: மறுபிரதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து 8 மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும், சான்றிதழ் கிடைத்தபாடில்லை. நேரில் வந்தாலும் அலுவலா்கள் உரிய பதில் அளிப்பதில்லை. அதேபோன்று இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் வழங்க வேண்டிய புலம் பெயா்வு சான்றிதழ்களுக்குக்கூட ஒரு மாதம் அளவுக்கு தாமதிக்கப்படுகிறது.

இதனால், அரசு வேலை, உயா் கல்வி, மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும் மாணவா்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனா். எனவே, தோ்வுத் துறை சாா்பில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை விரைவாக வழங்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு அவற்றைத் தாமதமின்றி வழங்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படும் எனத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com