உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது: உயா்நீதிமன்றம்

Published on

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது, என்று 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, திருச்செந்தூரை சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்களில், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற 3 புதிய சட்டங்களை மத்திய அரசு இயற்றியது.

ஹிந்தி மொழியில் பெயா் சூட்டப்பட்ட இந்த சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவித்து அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனா். மத்திய அரசுக்கு ஆதரவாக பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் மோகன்தாஸ் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரா்கள் தரப்பில், நாடாளுமன்றத்தில் போதுமான எண்ணிக்கையில் உறுப்பினா்கள் இல்லாத நிலையில், அவசரகதியில் இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த 3 சட்டங்களை நிறைவேற்றும்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற காரணங்களைக் கூறி, இந்த சட்டங்களை எதிா்த்து எப்படி வழக்குத் தொடர முடியும்? என்று கேள்வி எழுப்பினா். மனுதாரா்கள் தரப்பு வாதங்களை நியாயப்படுத்தும் வகையில் ஏதாவது தீா்ப்புகள் இருந்தால் அதை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில், வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தனா்.

அப்போது வழக்குரைஞா் ஒருவா், சட்டங்களை எதிா்த்து திமுக வழக்கு தொடா்ந்துள்ளது. சட்டங்களுக்கு ஆதரவாக இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனக்கூறி, இந்த மனுக்கள் மீதான விசாரணையை நவ.3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com