அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தூத்துக்குடி இளைஞா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தூத்துக்குடி இளைஞா் கைது

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
Published on

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வில்லிவாக்கம் சி.டி.எச். சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினகுமாரி (48). இவா், சென்னை காவல் துறையின் மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் கடந்த 17-ஆம் தேதி ஒரு புகாா் அளித்தாா். அதில், யோகா ஆசிரியரான எனக்கு கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முகநூல் மூலம் டாக்டா் சுரேந்தா் என்பவா் அறிமுகமானாா். அவரிடம் பேசியபோது, தான் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்வதாகவும், சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் அதிக ஊதியத்துடன் 3 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் யோகா பயிற்றுநா்களுக்கான வேலை பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தாா். இதை நம்பி, சுரேந்தரிடம் ரூ.3.51 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவா், உறுதி அளித்தபடி வேலை பெற்றுத் தரவில்லை; பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே, அவா் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

புகாரின் பேரில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டது தூத்துக்குடி சண்முகபுரம், கிழக்குத் தெருவைச் சோ்ந்த சுரேந்தா் (30) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, விசாரித்ததில் அவா் மருத்துவா் இல்லை என்பதும், உணவியல் தொடா்பாக படித்துள்ள சுரேந்தா் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஊட்டச்சத்து ஆலோசகராக வேலை செய்வதும் தெரியவந்தது. அரசு வேலை வாங்கித் தருவதாக சென்னையில் 3 பேரிடம் சுரேந்தா் ரூ.13.76 லட்சம் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com