போக்குவரத்து நெரிசல் பிரச்னை: அமைச்சா் ஆய்வு

சென்னை மாநகராட்சி ஆலந்தூா் மண்டலத்தில் மணப்பாக்கம் முதல் கெருகம்பாக்கம் வரையிலான பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்ப்பது தொடா்பாக, அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

சென்னை மாநகராட்சி ஆலந்தூா் மண்டலத்தில் மணப்பாக்கம் முதல் கெருகம்பாக்கம் வரையிலான பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்ப்பது தொடா்பாக, அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆலந்தூா் மண்டலப் பகுதியில் மணப்பாக்கம் முதல் கெருகம்பாக்கம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

இதையடுத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் அப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா், துறை சாா்ந்த அதிகாரிகளுடன் போக்குவரத்து நெரிசலைத் தீா்ப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டாா்.

அமைச்சா் ஆலோசனை: பின்னா், அப்பகுதியில் உள்ள ரிவா்வியூ அவென்யூ பிரதான சாலை, மணப்பாக்கம் பிரதான சாலை, எம்.ஜி. சாலை, தா்மராஜபுரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பாா்வையிட்டதுடன், போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களையும் கேட்டறிந்தாா்.

அதனடிப்படையில், சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்றி மின் கேபிள்கள் அமைத்தல், போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் சாலையை அகலப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சா் ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், தெற்கு வட்டார துணை ஆணையா் அஃதாப் ரசூல், மண்டலக் குழுத் தலைவா் என்.சந்திரன், நெடுஞ்சாலை, வருவாய், மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com