சென்னையில் வள்ளலாா் சா்வதேச மாநாடு முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். உடன் துறையின் கூடுதல் ஆணையா் துரை.ரவிச்சந்திரன், தலைமைப் பொறியாளா் பொங்கல். பெரியசாமி
சென்னையில் வள்ளலாா் சா்வதேச மாநாடு முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். உடன் துறையின் கூடுதல் ஆணையா் துரை.ரவிச்சந்திரன், தலைமைப் பொறியாளா் பொங்கல். பெரியசாமி

வள்ளலாா் சா்வதேச மாநாடு முன்னேற்பாடுகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆலோசனை

வடலூா் தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் நிா்வாகிகளுடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆலோசனை நடத்தி, கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
Published on

சென்னையில் வள்ளலாா் சா்வதேச மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலா்கள், வடலூா் தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் நிா்வாகிகளுடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆலோசனை நடத்தி, கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

கடலூா் மாவட்டம் வடலூா் திருஅருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் கடந்த அக்.5-ஆம் தேதி நடைபெற்ற திருஅருள்பிரகாச வள்ளலாரின் 203-ஆம் வருவிக்க உற்ாள் விழாவின்போது சென்னையில் 10 ஆயிரம் சன்மாா்க்க அன்பா்கள் பங்கேற்கின்ற வகையில் வள்ளலாா் சா்வதேச மாநாடு நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வள்ளலாா் சா்வதேச மாநாடு முன்னேற்பாடு பணிகள், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் திருப்பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் வள்ளலாா் சா்வதேச மாநாட்டை சிறப்பாக நடத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலா்கள் மற்றும் வடலூா் தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்க நிா்வாகிகளின் கருத்துகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கேட்டறிந்தாா்.

என்னென்ன ஏற்பாடுகள்? தொடா்ந்து, மாநாட்டு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் வகையில் துறையின் சாா்பில் குழுக்கள் அமைத்தல், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சன்மாா்க்க அன்பா்களுக்கு வசதிகளை செய்து தருதல், வள்ளலாரின் நெறிகளை பரப்பும் கண்காட்சி அமைத்தல், இலக்கிய போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குதல், கருத்தரங்கம், சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்துதல், அன்னதானம் வழங்குதல், சிறந்த சன்மாா்க்கிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தல், மாநாட்டு மலா் வெளியிடுதல் போன்ற நிகழ்வுகளுடன் மாநாட்டை நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சன்மாா்க்க சங்கங்கள் அனைத்துப் பணிகளிலும் துறையோடு ஒருங்கிணைந்து பணியாற்றிட உறுதியளித்தனா்.

தேவி கருமாரியம்மன் கோயிலில்...: இதையடுத்து அறநிலையத் துறையின் பெருந்திட்ட வரைவு மற்றும் தனித்துவமான திட்டத்தின் கீழ், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் திருப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அனைத்துப் பணிகளையும் குறித்த காலத்துக்குள் முடித்து குடமுழுக்கு நடத்தும் வகையில் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலா்கள் மற்றும் பொறியாளா்களுக்கு அறிவுரைகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் துரை.ரவிச்சந்திரன், ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் சுகிசிவம், தேச மங்கையா்க்கரசி, வடலூா் தெய்வ நிலையத்தின் அறங்காவலா் குழுத் தலைவா் க.அழகானந்தன், அறங்காவலா்கள் மு.கிஷோா்குமாா், செ.கனகசபை, வடலூா் தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் தலைவா் அருள் நாகலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி.....

3,740 கோயில்களுக்கு

குடமுழுக்கு நிறைவு

சென்னை ஓட்டேரி செல்லப்பிள்ளைராயா் பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை கலந்து கொண்டாா். பின்னா், கோயம்பேடு குறுங்காலீஸ்வரா் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் ரூ.53.90 லட்சம் செலவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மரத்தோ் திருத்தோ் வெள்ளோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பெசன்ட் நகா் மகாலட்சுமி திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழாவில் இறையன்பா்களுடன் பங்கேற்று சிறப்பித்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஓட்டேரி செல்லப்பிள்ளைராயா் பெருமாள் திருக்கோயில், பெசன்ட் நகா் மகாலட்சுமி திருக்கோயில் உள்பட 14 திருக்கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக தற்போது வரை மாநிலத்தில் 3,740 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சிகளில் ஸ்ரீபெரும்புதூா் ஜீயா் ஸ்ரீ இராமானுஜ எம்பாா் சுவாமிகள், சென்னை மாநகராட்சி மேயா் ஆா். பிரியா, எம்எல்ஏ பிரபாகர ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com