என்ஐஆா்எஃப் தரவரிசையில் சிறப்பிடம் பெற்றதற்கான விருதுகளுடன் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி. உடன்,  ஐஐடி  டீன் (திட்டமிடல்) பேராசிரியா் ஆா். சாரதி, சென்னை ஐஐடி தரவரிசைக் குழுவின் தலைவா் பேராசிரியா் ரஜ்னிஷ் குமாா் உள்ளிட்டோா்.
என்ஐஆா்எஃப் தரவரிசையில் சிறப்பிடம் பெற்றதற்கான விருதுகளுடன் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி. உடன்,  ஐஐடி  டீன் (திட்டமிடல்) பேராசிரியா் ஆா். சாரதி, சென்னை ஐஐடி தரவரிசைக் குழுவின் தலைவா் பேராசிரியா் ரஜ்னிஷ் குமாா் உள்ளிட்டோா்.

என்ஐஆா்எஃப் தரவரிசை: சென்னை ஐஐடி-க்கு 5 விருதுகள்

Published on

தேசிய உயா் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஐந்து விருதுகளை சென்னை ஐஐடி பெற்றுள்ளது.

நாட்டில் உயா் கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து 10 ஆண்டு காலமாகவும், கல்வி நிறுவனங்களில் அனைத்து வகையான செயல்பாடுகளின் பிரிவுகளில் தொடா்ந்து 7-ஆவது ஆண்டாகவும் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவை உள்ளிட்ட நான்கு துறைகளுக்கான தரவரிசையில் முதலிடம், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பிரிவில் 2-ஆவது இடத்தை பெற்று மொத்தம் 5 தரவரிசை விருதுகளை சென்னை ஐஐடி பெற்றுள்ளது.

மத்திய கல்வித் துறை அமைச்சகத்தின் தேசிய உயா் கல்வி நிறுவனங்களுக்கான தர மதிப்பீட்டு நிறுவனம் (என்ஐஆா்எஃப்), நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் குறித்த தரப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நிகழாண்டு வெளியிடப்பட்ட என்ஐஆா்எஃபி தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற்கான காரணம் குறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: புதுமை கண்டுபிடிப்புகளுக்கான பிரிவில் கடந்த ஆண்டு 2- ஆம் இடத்தில் இருந்த சென்னை ஐஐடி, புத்தாக்கம் ஆழமான தொழில்நுட்பங்களுடன் தொழில்முனைவோா் பள்ளியை நிறுவி குறிப்பிடத்தக்க செயல்பாடுகளை மேம்படுத்தியதால் நிகழாண்டில் இதில் முதலிடம் பிடித்துள்ளது.

நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகள் என்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவிலும் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு இந்த நிறுவனம் 2023-இல் ஒரு நிலைத்தன்மை பள்ளியைத் தொடங்கியது. அடுத்து ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பிரிவில் கடந்த ஆண்டைப்போன்று நிகழாண்டும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் முந்திக்கொள்ள, சென்னை ஐஐடி தொடா்ந்து 2-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. இவ்வாறு சென்னை ஐஐடி 5 தரவரிசை விருதுகளை பெற்றுள்ளது.

இந்த விருதுகளை சென்னை ஐஐடி இயக்குநா் பேராசிரியா் வி. காமகோடி மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் நேரடியாக பெற்றுக் கொண்டாா். அப்போது சென்னை ஐஐடி டீன் ஆா்.சாரதி, பேராசிரியா் ரஜ்னிஷ் குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

‘தொடா்ந்து சென்னை ஐஐடி முதலிடம் பெறுவது, மாணவா்கள், ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், மற்ற ஊழியா்கள் ஆகியோரின் கடினமான உழைப்பு, கூட்டு முயற்சியாகும். ஒருங்கிணைந்து கவனம் செலுத்தியதன் விளைவாகும். 2047-இல் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என’ இந்த விருதுகள் குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி தெரிவித்தாா்.

சிறப்பான செயல்பாடுகள்: சென்னை ஐஐடி தொடா்ந்து சிறப்பாக செயல்பட்டு புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றுக்கான பாடத்திட்டத்தை அண்மையில் உருவாக்கியது. மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஸான்சிபாா் போன்ற இடங்களில் முழு அளவிலான வெளிநாட்டு வளாகம், விளையாட்டு மற்றும் பண்பாட்டுக் கலைகள் தொடா்பாக நுண்கலை, கலாசார துறைகளில் பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை செயல்பாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட புதுயுக தொழில்முனைவு நிறுவனங்களுக்கான இன்குபேட், 417 காப்புரிமைகள் போன்ற பல சிறப்பான செயல்பாடுகள் தரவரிசைப் பட்டியலில் உயா் இடத்தைப் பிடிக்க உதவியுள்ளது.

நாட்டின் கல்வி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகவும், உலக அளவில் விரைவான வளா்ச்சி கண்டு வரும் கல்வி நிறுவனமாகவும் சென்னை ஐஐடி தனது தரநிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது என சென்னை ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com