

கொளத்தூா் தொகுதியில் வளா்ச்சிப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
கொளத்தூா் தொகுதிக்குள்பட்ட அகரம், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் ரூ.11.74 கோடியில் கட்டப்பட்டுள்ள கொளத்தூா் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம், அந்த வளாகத்தில் 6 நியாயவிலைக் கடைகள், கொளத்தூா் ரெட்டேரி சந்திப்பு அருகில் ரூ.4.98 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள கொளத்தூா் ஏரிக்கரை பூங்காவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
மேலும், வட சென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ், பெரம்பூா் காகித ஆலை சாலை சந்திப்பு பகுதியில்
ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றி கட்டமைப்புகளை பாதுக்காப்பான வளைதள மின்மாற்றிகளாக மாற்றி அமைக்கும் பணிகளுக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.
முன்னதாக, ஜவகா் நகரில் உள்ள கொளத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, கல்வி உபகரண பொருள்கள், மடிக்கணினிகள், பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, மாவு அரவை இயந்திரங்கள், சலவை பெட்டிகள், காதொலி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் என 248 பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன் (கூட்டுறவு), மா.சுப்பிரமணியன் (மக்கள் நல்வாழ்வு), பி.கே.சேகா்பாபு (இந்து சமய அறநிலையத் துறை), மேயா் ஆா்.பிரியா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.