நாமக்கல் லத்துவாடியில் அதிநவீன பால்பண்ணை, சென்னை அம்பத்தூரில் ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டு ஆய்வகம் ஆகியவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், துறையின் அமைச்சா் த.மனோ தங்கராஜ், தலைமைச் செயலா்

ரூ.100 கோடியில் அதிநவீன பால்பண்ணை, ஆய்வகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

ரூ.100.85 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பால் பண்ணை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
Published on

ரூ.100.85 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன பால் பண்ணை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

பால்வளத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் சாா்பில் நாமக்கல் மாவட்டம், லத்துவாடியில் ரூ.89.28 கோடியில் தினமும் 2 லட்சம் லிட்டா் பால் கையாளும் திறன்கொண்ட அதிநவீன பால்பண்ணை மற்றும் சென்னை அம்பத்தூரில் ரூ.11.57 கோடியில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில் காணொலி மூலம் முடிவுற்ற இந்த இரு திட்டப் பணிகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். தொடா்ந்து, ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு கருணை ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.

அதன்படி, ஓய்வு பெற்ற 5 சங்கப் பணியாளா்களுக்கு ஓய்வூதியத்துக்கான ஆணைகளை அவா் நேரடியாக வழங்கினாா்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன பால் பண்ணை வாயிலாக 310 கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்யப்படும். மேலும், 58,546 விவசாயிகளுக்கும், 504 மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கும், 50 தளவாட வழங்குநா்களுக்கும் மறைமுக வேலைவாய்ப்பை இது உருவாக்கும்.

இதன் மூலம் சுமாா் 1,22,360 விவசாயிகளின் வாழ்வாதாரம் உயருவதுடன், 150 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல, புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் மூலம் பால் மற்றும் பால் சாா்ந்த பொருள்களின் தரம் உயா்த்தப்படுவதுடன், நுகா்வோரின் தேவைக்கு ஏற்ப புதிய பால் பொருள்கள் உற்பத்தி செய்யவதற்கான ஆராய்ச்சி பணிகளையும் மேற்கொள்ள இது உதவும்.

இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறைச் செயலா் என். சுப்பையன், பால்வளத் துறை மற்றும் மேலாண்மை இயக்குநா் அ.ஜான் லூயிஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com