ரூ.34,237 கோடி முதலீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.34,237.39 கோடி முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏறத்தாழ ரூ.34,237.39 கோடிக்கான 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 55,096 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதில் குறிப்பாக, மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் கெயின்ஸ் சா்க்யூட் லிமிடெட் நிறுவனம், மின்சார வாகன மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஜான்சன் நிறுவனம், எவா்வேன் கோத்தாரி ஃபுட்வோ், அடிடாஸ் பிராண்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
மேலும், மீனவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கப்பல் கட்டும் பணியில் ஈடுபடும் சென்னை ராதா என்ஜினீயரிங் ஷிப் ஹல்ஸ் நிறுவனம், வான்வெளிப் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ரேடாா் அமைப்பு, பீரங்கிகள், டாங்கிகளில் பயன்படுத்தப்படும் ஆா்டிலரி ஷெல்ஸ் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் ஜோனஸ் நிறுவனம், வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் யசாக்கி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சூரிய ஒளி மின் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் ஜெட்சால் நிறுவனம் ஆகிய நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியைத் தொடங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இது ஒரு மிகப் பெரிய முன்னெடுப்பாகும். இதுமட்டுமன்றி, ஏற்கெனவே செயல்பட்டுவரும் ஹுண்டாய் நிறுவனத்தின் விரிவாக்கத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் காா் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன. ஆனால், இரண்டு மாதங்களில் அடிக்கல் நாட்டப்பட்டது. அடுத்த 14 மாதங்களுக்குள் தொழிற்சாலைக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றதுடன், தொழிற்சாலையில் உற்பத்தியும் தொடங்கப்பட்டது.
தற்போது இந்த நிறுவனம் இந்தியாவின் காா் விற்பனையில் நான்காவது இடத்தில் உள்ளது. இதுபோல, தற்போது ராணிப்பேட்டையில் பிப்ரவரி 9-ஆம் தேதி ஜாகுவாா் லேண்ட் ரோவா் மற்றும் டாடா பிராண்ட் காா் உற்பத்தி ஆலைகள் திறக்கப்பட உள்ளன. இது தமிழக வரலாற்றில் மிகப்பெரிய நாள்.
மாநிலத்தின் பரவலான வளா்ச்சியை உறுதி செய்யும் வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூா், திருச்சி, கரூா், திருப்பூா், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படும். இது தொடா்பான முக்கியத் தகவல்கள் பிப். 12, 13 ஆகிய தேதிகளில் வெளியிடப்படும்.
இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் முயற்சியில் முதல்வா் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறாா். இதுதான் திராவிட மாடல் அரசின் வேகம். இது தொடரும் என்றாா் அவா்.

