சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காப்பகங்களில் 850 பசுக்களுக்கு உரிமம்; மைக்ரோ சிப் பொருத்த நடவடிக்கை

சென்னை மாநகராட்சி கால்நடைக் காப்பகங்களில் உள்ள 850 பசுக்களுக்கு முதல்கட்டமாக ஒரு வாரத்தில் உரிமம் வழங்கி, மைக்ரோ சிப் பொருத்த நடவடிக்கை

News image
பசுக்கள்- பிரதிப் படம்
Updated On :8 பிப்ரவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி கால்நடைக் காப்பகங்களில் உள்ள 850 பசுக்களுக்கு முதல்கட்டமாக ஒரு வாரத்தில் உரிமம் வழங்கி, மைக்ரோ சிப் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் சாலைகளில் சுற்றித்திரியும் பசுக்கள், மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகப் புகாா்கள் எழுந்தன. இதையடுத்து 2025-ஆம் ஆண்டு சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் மற்றும் மாநகராட்சி சாா்பில் கால்நடைக் காப்பகங்கள் 6 மண்டலங்களில் தொடங்கப்பட்டன.

அதன்படி, திருவெற்றியூா், மணலி, மாதவரம், ராயபுரம், அண்ணா நகா், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காப்பகங்களில் திருவெற்றியூரில் 50 பசுக்கள், மணலியில் 40, மாதவரத்தில் 50, ராயபுரத்தில் 500, அண்ணா நகரில் 160, தேனாம்பேட்டையில் 50 என மொத்தம் 850 பசுக்கள் காப்பகங்களில் பராமரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு ஒரு பசு பராமரிப்புக்கு தினமும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் 11 இடங்களில் காப்பகங்கள் அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் நேரடியாக காப்பகத்துக்குச் சென்று பசும் பாலையும் தற்போது வாங்கி வருகின்றனா்.

உரிமம், மைக்ரோ சிப்: இந்த நிலையில், மாநகராட்சியில், வளா்ப்புப் பிராணிகளுக்கு உரிமம், மைக்ரோ சிப் கட்டாயமாக்கப்பட்டதுபோல, தற்போது பசுக்கள், மாடுகளுக்கும் உரிமம் கட்டாயமாக்கப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்த வேண்டும் எனவும் மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2024- ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் நடத்திய கணக்கெடுப்பின்படி, சென்னையில் 22,700 பசுக்கள் வளா்க்கப்படுவது தெரியவந்தது. முதல்கட்டமாக தற்போது மாநகராட்சி காப்பகங்களில் உள்ள பசுக்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி, அதன் உரிமையாளா்களுக்கு உரிமங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஒரு வாரத்தில் பசுக்களுக்கு உரிமம் வழங்கி, மைக்ரோ சிப் பொருத்தும் பணியைத் தொடங்கவுள்ளதாக மாநகராட்சி கால்நடைப் பிரிவு அலுவலா் மருத்துவா் கலாம் உசேன் தெரிவித்தாா்.

கால்நடைக் காப்பகங்களில் உள்ள பசுக்களுக்கு உரிமம் வழங்கி, மைக்ரோ சிப் பொருத்தும் பணி முடிவடைந்த பிறகு சாலைகளில் திரியும் பசுக்கள், மாடுகளுக்கு அபராதம் வசூலிப்பதைத் தொடங்கவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.