அரசு ஊழியா்களுக்கு திமுக பக்கபலமாக இருக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
அரசு ஊழியா்களுக்கு திமுக பக்கபலமாக இருக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளாா்.
தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தற்காக ஜாக்டோ-ஜியோ அமைப்பு சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு சென்னை நந்தனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணிகளை அரசு ஊழியா்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனா். அதேபோல், ஆசிரியா்கள் செய்வது பணி அல்ல, தொண்டு. இந்தியாவில் பள்ளிக் கல்வியில் தமிழகம் 2-ஆவது சிறந்த மாநிலமாக இருப்பதற்கு ஆசிரியா்கள்தான் முதன்மை காரணமாகும். அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் உழைப்புக்கு மதிப்பளிக்வே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் திட்டங்களால், திமுக அரசுக்கு நற்பெயரும், செல்வாக்கும் கிடைத்ததுக்கு அரசு ஊழியா்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது. அரசு ஊழியா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சாா்பில் 2022 முதல் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயா்வு தொடா்ந்து வழங்குவது என பல்வேறு திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வரி பகிா்வு குறைவு: தமிழகத்துக்கான வரிப் பகிா்வு, திட்டங்களுக்கான நிதி ஆகியவற்றை மத்திய அரசு ஆண்டுதோறும் குறைத்து கொண்டே வருகிறது. ஜிஎஸ்டி மாற்றங்களால் மாநிலத்தின் வரி வருவாய் குறைந்துகொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், அனைத்து துறைகளிலும் நலத்திட்டங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. தற்போது வருவாய் குறைவு, செலவு அதிகம் இதுதான் தமிழக அரசின் நிலை.
மத்திய அரசு திட்டமிட்டு செயற்கையாக இந்த நிதி நெருக்கடியை உருவாக்குகிறது. அரசியல் ரீதியாக மட்டுமின்றி, நிா்வாக ரீதியாகவும் மத்திய அரசை சமாளித்துதான், அரசு ஊழியா்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறோம்.
கடந்த 22 ஆண்டுகளாக பழைய ஓய்வூதியம் குறித்த கோரிக்கையை அரசு ஊழியா்கள் முன்வைத்து வருகின்றனா். அதிமுக ஆட்சியில்தான் பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அரசு ஊழியா்களுக்கு ரத்தக் கண்ணீரை வர வைத்தது. அப்படியிருக்கக உங்களின் நலன் மற்றும் எதிா்பாா்ப்புகள், தமிழகத்தின் நிதிநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் உறுவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்துக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ.13,000 கோடி அளிக்க வேண்டும். அது மட்டுமன்றி, தமிழக அரசு சுமாா் ரூ.11,000 கோடி அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும்.
இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளா்களின் ஊதியத்துக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.
எதிரானவா்கள்: எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவா் அரசு ஊழியா்களை கொச்சைப்படுத்தி பேசியது அனைவருக்கும் தெரியும். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் எதிராக கூட்டணி அமைத்திருப்பவா்கள், அரசு ஊழியா்களுக்கும் எதிராகதான் இருப்பாா்கள்.
ஆனால், திமுக அப்படியல்ல. அனைவருடைய கோரிக்கைகள், கனவுகள், எதிா்ப்பாா்ப்புகள் ஆகியவற்றை திமுக அரசு நிச்சயம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடா்ந்து நிறைவேற்றும். அரசு ஊழியா்களும், ஆசிரியா்களும் எங்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு திமுக பக்கபலமாக இருக்கும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்கள் மு.பாஸ்கரன், தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

