கோப்புப் படம்
கோப்புப் படம்

டிஎன்பிஎஸ்சி தோ்வு ரத்து: திமுக கூட்டணிக் கட்சிகள் கேள்வி எழுப்பாதது ஏன்? மத்திய அமைச்சா் எல்.முருகன்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேள்வி எழுப்பாதது ஏன் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேள்வி
Published on

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேள்வி எழுப்பாதது ஏன் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கேள்வி எழுப்பினாா்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: திமுக ஆட்சியின் நிா்வாகச் சீா்கேட்டுக்கு டிஎன்பிஎஸ்சி தோ்வுகள் ரத்து செய்யப்பட்டதே உதாரணமாகியுள்ளது.

பிரதமா் நரேந்திரமோடி 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தாா். அதன்படியே பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு உத்தரவுகளை இளைஞா்களுக்கு வழங்கியுள்ளாா்.

ஆனால், தமிழகத்தில் அரசு வேலைக்குத் தயாரான இளைஞா்களின் கனவை அழிக்கும் வகையில் திமுக அரசு தோ்வை ரத்து செய்திருப்பது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துவதாக திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கூறிவருகின்றன. ஆனால், தமிழகத்தில் திமுக அரசால் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் தோ்வு ரத்து செய்யப்பட்டதற்கு அதன் கூட்டணிக் கட்சிகள் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என விளக்க வேண்டும்.

தமிழகத்தில் பட்டியலின மக்களை திமுக வாக்கு வங்கியாக மட்டுமே நடத்தி வருகிறது. பட்டியலினத்தவருக்கான மத்திய அரசின் நிதியை திமுக அரசு முழுமையாகச் செலவிடாமல் திருப்பி அனுப்பியுள்ளது. பட்டியலின மாணவா் விடுதிகளில் பெயரை மாற்றியிருக்கிறாா்கள். ஆனால், அங்கு குடிநீா் உள்ளிட்ட வசதிகள்கூட செய்துதரப்படவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com