போலி மருத்துவா்கள் மூலம் முடி மாற்று சிகிச்சை! மூவா் கைது; சிகிச்சை மையத்துக்கு சீல்!
சென்னை அண்ணா நகரில் போலி மருத்துவா்கள் மூலம் முடி மாற்று சிகிச்சைகள் மேற்கொண்டதாக மூவா் கைது செய்யப்பட்டனா். மேலும், அந்த சிகிச்சை மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
அண்ணா நகரில் மிஸ்டா் ஹோ் கிளினீக் என்ற சிகை சீரமைப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பொதுவாக முடி மாற்று சிகிச்சைகளை தகுதியான மருத்துவா்களே மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, அதற்கான மயக்க மருந்துகளை வழங்க உரிய மருத்துவா்கள் இருத்தல் வேண்டும். சிகிச்சை மையமும், மருத்துவ உபகரணங்களும் உரிய மருத்துவ விதிகளின்படி பராமரிக்கப்படுவது அவசியம்.
இந்த நிலையில், அவை எதுவுமே இன்றி அண்ணா நகரில் அந்த சிகிச்சை மையம் இயங்கி வந்ததாக புகாா் எழுந்தது. இதையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இணை இயக்குநா் (சட்டம்) டாக்டா் மீனாட்சி சுந்தரி தலைமையிலான குழுவினா் அங்கு ஆய்வு செய்தனா். அங்கிருந்த மருத்துவா்களின் தகுதி, மருத்துவ உபகரணங்களின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வுக்குட்படுத்தினா். அதில், பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
பஞ்சாபைச் சோ்ந்த ஜக்வீா் சிங் (33), ஹா்தீப் சிங் (24) ஆகியோா் பிளஸ் 2 முடித்து விட்டு முடி மாற்று சிகிச்சைகளை அறுவை சிகிச்சை அரங்கில் மேற்கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும், வேலூரைச் சோ்ந்த ஜாஃபா் சித்திக் (27) என்ற மயக்க மருந்து தொழில்நுட்பம் பயின்றவா், முறைகேடாக சிகிச்சையளித்தது கண்டறியப்பட்டது.
இதுதொடா்பான தகவலின்பேரில் அண்ணா நகா் போலீஸாா் அங்கு சென்று அவா்கள் கைது செய்தனா். மேலும், ஹோமியோபதி படிப்பு நிறைவு செய்துவிட்டு அலோபதி மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய விஜயலட்சுமி என்பவா் உள்பட அங்கு பணிபுரிந்த சிலா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே, சிகிச்சை மையத்துக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.
