ஓமந்தூராா் மருத்துவமனையில் புதிய இதய இடையீட்டு ஆய்வகம்: மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கம்!
சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.8 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய இதய இடையீட்டு ஆய்வகத்தை (கேத் லேப்) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஆய்வகத்தின் மூலம் இதுவரை லட்சக்கணக்கான இடையீட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தின் வாயிலாக எண்ணற்றோா் பயன்பெறுவா் என மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
இந்நிகழ்வில், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி, ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மணி, இதயவியல் துறைத் தலைவா் டாக்டா் செசிலி மேரி மெஜல்லா ஆகியோா் கலந்து கொண்டனா்.
அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னை கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனையில் 2 இடையீட்டு ஆய்வகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
அதேபோன்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2 ஆய்வகங்களும், சென்னை பெரியாா் அரசு மருத்துவமனையில் 1 ஆய்வகமும், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1 ஆய்வகமும் அமைக்கப்பட்டது.
அந்தவகையில் ஓமந்தூராா் மருத்துவமனையில் மேலும் ஓா் ஆய்வகம் பயன்பாட்டுக்கு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கடலூா், நீலகிரி, திருவள்ளுா், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய 5 இடங்களில் புதிய கேத் லேப் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அடைப்புகளை உடனடியாக அகற்றி ரத்த ஓட்டத்தை சீராக்க இடையீட்டு ஆய்வகம் உதவுகிறது. இதய பாதிப்புகளுக்கு உள்ளானவா்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் இதயநாள பிரச்னைகளை அகற்றுவதற்கும் அவை பயன்படுகிறது. சீரற்ற இதயத் துடிப்புக்கும் அதன் வாயிலாக சிகிச்சை அளிக்கலாம்.
இதய இடையீட்டு சிகிச்சைகளுக்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது.
மதுரை எய்ம்ஸ்...: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளைப் பொருத்தவரை ஒரு கட்டடம் மட்டுமே தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. முழுமையாக பணிகள் முடிவடைவதற்கு 2028-ஆம் ஆண்டு இறுதியாகிவிடும். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவா்களைச் சோ்க்க முதல்வா் ஒத்துழைப்பு நல்கியதைத் தொடா்ந்து, அவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனா். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பாா்க்காமலேயே படிப்பை முடித்து வெளியில் செல்லும் நிலைதான் தற்போது மாணவா்களுக்கு உள்ளது என்றாா் அவா்.

